×

பள்ளிச் சீருடை அணிந்த குழந்தைகளை ஈடுபடுத்த கூடாது வேட்பாளர்கள், கட்சி தலைவர்களின் ‘ரோடு ஷோ’வா?

*பொதுமக்களுக்கு இடையூறு இன்றி நடத்த ஆணையம் கட்டுப்பாடு

நாகர்கோவில் : தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கமான சாலைக் காட்சிகள் (ரோடு ஷோ), பொதுமக்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்காத வகையிலும், பாதுகாப்பான முறையிலும் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தேர்தல் வேளையில் அரசியல் கட்சி தலைவர்கள் மக்களை சாலை காட்சியாக அதாவது ரோடு ஷோவாக வந்து சந்திப்பது வழக்கம். இதனால் அந்த சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மக்கள் மாற்றுப்பாதையில் வாகனங்களை இயக்க வேண்டிய நிலை வரும். கடும் போக்குவரத்து நெரில் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. இதனால் இதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் விபரம் வருமாறு:

அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் சாலைக் காட்சிகளை நடத்துவதற்கு முன்னதாகவே தகுந்த அதிகாரியிடம் உரிய அனுமதி பெற வேண்டும். பேரணியில் பங்கேற்க உள்ள வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் நபர்களின் எண்ணிக்கையை முன்கூட்டியே அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க, சாலைக் காட்சிகளை முடிந்தவரை விடுமுறை நாட்களில் அல்லது போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரங்களில் மட்டுமே நடத்த வேண்டும். பெரிய மருத்துவமனைகள், அவசரச் சிகிச்சைப் பிரிவுகள், ரத்த வங்கிகள் மற்றும் அதிக மக்கள் நெரிசல் கொண்ட சந்தைப் பகுதிகள் வழியாகச் சாலைக் காட்சிகள் நடத்த அனுமதி கிடையாது.

சாலைக் காட்சியின் போது சாலையின் மொத்த அகலத்தில் பாதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற பாதி சாலை பொதுமக்களின் அவசரத் தேவை மற்றும் போக்குவரத்திற்காக எப்போதும் காலியாக இருக்க வேண்டும். அணிவகுப்பில் செல்லும் வாகனங்கள் ஒவ்வொன்றிற்கும் இடையே தகுந்த இடைவெளி இருக்க வேண்டும்.

குறிப்பாக ஒவ்வொரு 10 வாகனங்களுக்கும் (பாதுகாப்பு வாகனங்கள் தவிர்த்து) இடையே குறைந்தது 100 மீட்டர் இடைவெளி கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும். இந்த இடைவெளி இல்லையெனில், காவல்துறை அந்த அணிவகுப்பைத் தடுத்து நிறுத்திப் பிரித்துவிடும்.

சாலைக் காட்சிகளில் யானை, குதிரை, ஒட்டகம் போன்ற எந்த விதமான விலங்குகளையும் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை குறிப்பாகப் பள்ளிச் சீருடை அணிந்த குழந்தைகளைப் பிரச்சாரத்தில் அல்லது சாலைக் காட்சிகளில் எக்காரணம் கொண்டும் ஈடுபடுத்தக் கூடாது.

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சாலைக் காட்சிகளின் போது பட்டாசுகளை வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், எவ்விதமான கத்திகள், துப்பாக்கிகள் அல்லது பிற ஆயுதங்களைக் கையில் ஏந்திச் செல்லவோ அல்லது வாகனங்களில் காட்சிப்படுத்தவோ அனுமதி இல்லை.

சாலைக் காட்சியில் பயன்படுத்தப்படும் பிரச்சார வாகனத்தில் ஒரே ஒரு கொடி (1 அடி x 1/2 அடி அளவு) மட்டுமே கட்டப்பட வேண்டும். இதற்குத் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் உரிய அனுமதி பெற வேண்டும். கையில் ஏந்திச் செல்லும் பேனர்களின் அளவு 6 அடி x 4 அடி என்ற அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தும் போது, அந்தந்தப் பகுதியின் பாதுகாப்புச் சூழல், வானிலை மற்றும் தேர்வு காலங்களைக் கருத்தில் கொண்டு உள்ளூர் சட்டங்களுக்கு உட்பட்டுச் செயல்பட வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை எவ்வித ஒலிபெருக்கிகளையும் பயன்படுத்தக் கூடாது.

இந்த விதிகளை மீறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், வேட்பாளர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

Tags : Nagargo ,
× RELATED நாகர்கோவில் மாநகர பகுதியின் குடிநீர்...