×

குன்னூர் வெலிங்டனில் குடியிருப்பு பகுதிக்குள் 3 வது முறை புகுந்த சிறுத்தை

குன்னூர் : குன்னூர் அருகே வெலிங்டன் பகுதியில் 3வது முறையாக குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சியால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் அண்ணாநகர் கிராமத்தில் வன விலங்குகள் அடிக்கடி உலா வருகின்றன. இந்த பகுதியில ​​சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமம் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதன் காரணமாக கரடி, காட்டுமாடு,சிறுத்தை போன்ற வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வழக்கமாக உள்ளது.

நேற்று அதிகாலை 4.40 மணியளவில் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, ஆள் நடமாட்டமற்ற வீதிகளில் சாதாரணமாக நடந்து சென்றுள்ளது.பின்னர் அருகில் இருந்த தேயிலை செடிகளுக்குள் புகுந்து மறைந்தது. இந்த காட்சிகள் அங்குள்ள ஒரு வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.​ இந்த காட்சி வெளியானதால் மக்கள் பீதியடைந்தனர்.

தொடர்ந்து வனவிலங்குகளின் அச்சுறுத்தல் இருந்து வருவதால், அண்ணாநகர் பகுதி மக்கள் வெளியே நடமாடவே அச்சமடைந்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. வனத்துறையினர் உடனடியாக இப்பகுதியில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

இதுவரை 3வது முறையாக குடியிருப்புக்குள் புகுந்துள்ளது. மக்களை அச்சுறுத்தும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.​வனத்துறையினர் இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட்டு, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Gunnar Wellington ,Gunnar ,Wellington ,Nilgiri ,Kunnur ,
× RELATED மாவட்டத்தில் சிலிண்டர்...