மதுரை, மார்ச் 25: தமிழகத்தில் ஏப்.23ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வழங்கும் பணிகளில் முதற்கட்டமாக சுழற்சி முறையிலான தேர்வு நடத்தப்பட்டது. மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் அனைத்து தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதில் தொகுதி வாரியாக வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை தடம் (விவிபேட்) ஆகியவற்றை அங்குள்ள வாக்குப்பதிவு மையங்கள் எண்ணிக்கை அடிப்படையில் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மதுரை, காந்தி மியூசியம் சாலையில் உள்ள மாவட்ட கிடங்கில் இருக்கும் இயந்திரங்களை தொகுதி வாரியாக அவற்றின் தலைமை இடத்திற்கு அனுப்பி வைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதன்படி போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் செல்லும் இந்த இயந்திரங்கள் திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான், மேலூர் உள்ளிட்ட தொகுதிகளின் தலைமை இடமாக தாசில்தார் அல்லது ஆர்டிஓ அலுவலகங்களில் பாதுகாக்கப்படுகின்றன. பின்னர் தேர்தலுக்கு முன் அவை சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் மேற்பார்வையில், வாக்குச்சாவடி மையங்களுக்கு அவற்றில் பணியாற்றும் அலுவலர்கள்மற்றும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
