×

92,000 டன் சமையல் எரிவாயுவுடன் மேலும் 2 இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தன: 2 நாளில் வந்தடையும்

புதுடெல்லி: போர் சூழலுக்கு மத்தியில், 92,000 டன் சமையல் எரிவாயுவுடன் (எல்பிஜி) மேலும் 2 இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பத்திரமாக கடந்துள்ளன. அவை 2 நாளில் இந்திய துறைமுகத்தை வந்தடையும்.
மேற்கு ஆசியாவில் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளித்து வருகிறது. அதன்படி, ஏற்கனவே 92,712 டன் எல்பிஜியுடன் சிவாலிக், நந்தா தேவி ஆகிய 2 கப்பல்கள் கடந்த 16, 17ம் தேதிகளில் இந்திய துறைமுகங்களை வந்தடைந்தன.

இந்நிலையில், மேலும் 2 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்திருப்பதாக தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன. பைன் காஸ் மற்றும் ஜக் வசந்த் ஆகிய 2 எல்பிஜி இந்திய கப்பல்கள் நேற்று முன்தினம் பாரசீக வளைகுடாவில் இருந்து புறப்பட்டு ஹார்முஸ் ஜலசந்தியை கடந்ததாக கப்பல் கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன. இந்த 2 கப்பல்களும் சுமார் 92,000 டன் எல்பிஜியை ஏற்றிக் கொண்டு வருவதாக ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் ஒருநாள் தேவையை பூர்த்தி செய்யக் கூடியவை.

இந்த 2 கப்பல்களும் ஈரானின் லாரக், கெஷ்ம் தீவுகளுக்கு இடைப்பட்ட கடல் வழியாக பயணித்ததாகவும் இவை தங்கள் அடையாளத்தை தெளிவுபடுத்த இவ்வாறு பயணித்திருக்கலாம் என்றும் கப்பல் கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. மேற்கு ஆசியாவில் போர் மூண்ட போது ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்கு பகுதியில் 24 இந்திய கப்பல்களும், கிழக்கு பகுதியில் 4 கப்பல்களும் இருந்தன. இருபுறத்தில் இருந்தும் தலா 2 கப்பல்கள் வெளியேறிய நிலையில் தற்போது மேற்கு பகுதியில் இருந்து மேலும் 2 கப்பல்கள் வெளியேறி உள்ளன. இந்த 2 கப்பல்களும் இன்னும் 2 நாளில் இந்திய துறைமுகத்தை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது. எந்த துறைமுகங்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. இந்த 2 கப்பல்களில் 11 மாலுமிகள் நாடு திரும்புகின்றனர்.

Tags : Strait of Hormuz ,New Delhi ,Iran ,West Asia ,
× RELATED ஓமன் நாட்டில் வெள்ளபெருக்கில் சிக்கி பாலக்காட்டை சேர்ந்த 2 பேர் பலி