×

அனில் அம்பானி வழக்கில் தயக்கம் காட்டிய சிபிஐ, ஈடி: உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி

புதுடெல்லி: அனில் அம்பானி குழுமம் மற்றும் அதன் நிறுவனங்கள் தொடர்புடைய வங்கி மோசடி குறித்து விசாரிப்பதில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தயக்கம் காட்டியதாக உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அனில் அம்பானி தலைமையிலான ஏடிஏஜி நிறுவனங்கள் ரூ.40 ஆயிரம் கோடி கடன் மோசடிகளில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தக் கோரி முன்னாள் அரசு அதிகாரி ஈ.ஏ.எஸ்.சர்மா தாக்கல் செய்த பொது நல மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த புகார் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டதாகவும் ரூ.15,000 கோடி சொத்து முடக்கி சில மூத்த அதிகாரிகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டதாகவும் சிபிஐ, ஈடி அமைப்புகள் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி, ‘‘சிபிஐ இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. யாரை கைது செய்ய வேண்டும் என்று எங்களால் உத்தரவிட முடியாது. ஆனால் புலனாய்வு அமைப்புகள் காட்டியுள்ள தயக்கம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. விசாரணையில் என்ன கண்டறியப்பட்டுள்ளது என்பதை அவர்கள் குறிப்பிட்ட காலவரையறைக்குள் தெரிவிக்க வேண்டும். இந்த மோசடியில் சம்மந்தப்பட்ட தொகை ரூ.73,000 கோடியாக இருக்கும் என மதிப்பிடுகிறோம். எனவே சம்மந்தப்பட்ட அனைத்து நிதி நிறுவனங்களும் அமலாக்கத்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ எனக் கூறி புதிய நிலை அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

Tags : CBI ,ED ,Anil Ambani ,Supreme Court ,New Delhi ,Enforcement Directorate ,Anil Ambani Group ,ADAG ,
× RELATED ஓமன் நாட்டில் வெள்ளபெருக்கில் சிக்கி பாலக்காட்டை சேர்ந்த 2 பேர் பலி