×

புன்னைநகர் – இடையன்விளை சாலையை சீரமைக்க கோரிக்கை

நாசரேத், மார்ச் 24: சேதமடைந்து கிடக்கும் புன்னைநகர் – இடையன்விளை சாலையை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாசரேத்- குரும்பூர் இடையே உள்ள கச்சனாவிளை ஊராட்சிக்குட்பட்ட புன்னை நகர் -இடையன்விளை சாலை, மழையினால் சாலையோர பகுதியில் அரிக்கப்பட்டு பெரிய பள்ளங்களாக காட்சி அளிக்கிறது. இவ்வழியாக தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவ- மாணவியர், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று திரும்புகின்றனர். மேலும் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கும், புன்னைநகர் வனதிருப்பதி கோயிலில் நடைபெறும் விழாக்களுக்கும் வாகனங்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இவ்வழியாக தான் செல்கின்றன. கரையோரங்களில் சேதமடைந்து கிடக்கும் இச்சாலையால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவதோடு பல இன்னல்களுக்கு ஆளாகி விடுகின்றனர். இரவு நேரங்களில் சிறு சிறு விபத்துகளும் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்து கிடக்கும் புன்னைநகர்- இடையன்விளை சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுமென இப்பகுதி கிராம மக்கள், மாணவ- மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Punnai Nagar – Idayanvilai road ,Nazareth ,Kachanavilai panchayat ,Kurumpur ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...