×

வீட்டு சாப்பாடா… ஓட்டல் சாப்பாடா… நடிகையை விட மனைவியே முக்கியம்: விஜய்யை விளாசிய நடிகர் சிவகுமார்

சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சிவகுமார், நிருபர்களிடம் கூறுகையில், ‘அனைவரும் வாழ்க்கையில் கடினமாக உழையுங்கள். இந்த உலகத்தில் எல்லாம் பெற்றவர் என்பவர் யாரும் கிடையாது. நடிகர் நாடாளலாம் என்று இந்த உலகத்துக்கு நிரூபித்தவர் எம்.ஜி.ஆர். அப்படி ஒரு நடிகர் இனிமேல் பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை. இந்த நாட்டை ஆட்சி செய்தவர் எம்.ஜி.ஆர். ஆனால், அவருக்கு வாரிசு இல்லை.

உலகத்திலேயே பெரிய நடிகர் சிவாஜி கணேசன். அவரை மாதிரியும் இன்னொருவர் இனி பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை. அவரே அரசியலுக்கு வந்து தோற்றுவிட்டார். நீங்கள் உழைத்துக்கொண்டே இருங்கள். கடவுள் என்ன கொடுக்கிறாரோ அதை வைத்து சந்தோஷமாக இருங்கள். இன்னொருவருடன் ஒப்பீடு செய்யாதீர்கள். நான் காமராஜர் காலத்திலேயே முதலமைச்சராக வேண்டும் என்று நினைத்தேன். அந்த வாய்ப்பு தவறிவிட்டது’ என்றார்.

‘வீட்டு உணவு பிடிக்குமா? ஓட்டல் உணவு பிடிக்குமா’ என்ற கேள்விக்கு பதிலளித்த சிவகுமார், ‘இந்த கேள்வி, மனைவி பிடிக்குமா? அல்லது நடிகை பிடிக்குமா என்று கேட்பது போல் இருக்கிறது. மனைவி இல்லை என்றால் சூர்யா, கார்த்தி எல்லாம் எப்படி பிறந்திருப்பார்கள்? நடிகைகளிடம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? வீட்டு உணவு நிரந்தரம். ஒரு மாறுதலுக்காக ஓட்டல் சென்று சாப்பிடலாமே தவிர, தினமும் சாப்பிட்டால் உடலில் பல பிரச்னைகள் வரும்.

இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பிடி பழைய சோறு, கொய்யா, பப்பாளி பழம் சில துண்டுகள் சாப்பிட்டுவிட்டு வந்தேன். இவைதான் எனது இளமைக்கு காரணம். தினமும் 7 மணி நேரம் தூங்குங்கள், நேரத்திற்கு உணவு அருந்துங்கள், நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உயிர் வாழ காற்று, தண்ணீர் மிகவும் அவசியம். அதற்கு பிறகுதான் உணவு’ என்றார். எல்லா நடிகர்களும் எம்ஜிஆர் ஆகி விட முடியாது.. நடிகையை விட மனைவிதான் முக்கியம் என்று நடிகர் விஜய்யை தாக்கி சிவகுமார் பேசியது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : Sivakumar ,Vijay ,Chennai ,MGR ,
× RELATED ரயில்கள் மீது கல்வீசும் நபர்கள் மீது...