×

நடிகர் விஜய் ஒரு தலைவனே கிடையாது பாஜவில் பொறுப்பு கொடுக்காததால் ஆதங்கத்தில் உள்ளேன்: சரத்குமார் பேட்டி

சென்னை: நடிகர் விஜய் ஒரு தலைவனே கிடையாது எனவும் பாஜவில் பொறுப்பு கொடுக்காததால் நான் ஆதங்கத்தில் உள்ளேன் எனவும் சரத்குமார் கூறினார். நடிகர் சரத்குமார் 2007ம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். 2011ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி அமைத்து தென்காசி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். ஆனால் 2016 தேர்தலில் மீண்டும் அதிமுக கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்குத் தோல்வியே மிஞ்சியது.

அதன்பிறகு, சமகவின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. திடீரென யாரும் எதிர்பாராத திருப்பமாக கடந்த 2024ம் ஆண்டு ஒருநாள் நள்ளிரவில் எழுந்த யோசனையால், மனைவி ராதிகாவை எழுப்பிக் கருத்து கேட்டுத் தனது சமத்துவ மக்கள் கட்சியை அப்போதைய பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜவோடு இணைத்தார் சரத்குமார். கட்சியை இணைத்து இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும் தற்போதுவரை சரத்குமாருக்கு கட்சியில் தேசிய அளவிலான பொறுப்பு கொடுக்கவில்லை.

இந்நிலையில், அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்பதை விவாதிக்கசென்னை, தியாகராயநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் சரத்குமார். தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து சரத்குமார் கூறியதாவது: தேர்தல் நேரத்தில் எங்களுக்கு எந்தப் பொறுப்பும் வழங்கவில்லை என நிர்வாகிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். தலைவருக்கு பொறுப்பு இல்லாமல் என்ன வேலை செய்வது எனவும் தங்களது கருத்துகளைக் கூறினர்.

நீங்கள் ஏன் மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கக் கூடாது என நிர்வாகிகள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். திருச்சியில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் எனது புகைப்படம் பேனரில் இல்லாதது எனது ஆதரவாளர்களுக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியது. 15 நாட்களாக எனது கருத்தை மாநிலத் தலைமையிடம் தெரிவித்து வருகிறேன். அவர்களும் எனது கருத்தை ஏற்று முடிவு எடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள் என தெரிவித்து இருந்தனர். எங்கள் கருத்தை பாஜ செயல்படுத்தும் என நம்புகிறேன்.

தற்போது சமத்துவ மக்கள் கட்சியை புதுப்பிக்கும் எண்ணம் இல்லை. நான் கட்சியை கலைத்து பாஜவில் இணைந்த போது தேசிய அளவில் பொறுப்புகள் வழங்கப்படும் என தொடக்கத்தில் கூறினார்கள். ஆனால் அவர்கள் வழங்கவில்லை. அதனால் நான் ஆதங்கத்தில் உள்ளேன், ஆனால் அதிருப்தியில் இல்லை. எனது ஆதங்கத்தைக் கட்சிக்கு வெளிப்படுத்த போகிறோம். இந்தத் தேர்தலில் நான் நிற்க மாட்டேன், என் மனைவியும் நிற்கமாட்டார். கட்சித் தலைமை என்னை போட்டியிடச் சொன்னாலும் நான் தேர்தலில் நிற்க மாட்டேன் என தெரிவித்தார்.

நல்ல தலைவர்கள் வர வேண்டும். எப்படிப்பட்டவர்கள் இந்த நாட்டை ஆள வேண்டும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் யாருக்கு வாக்கு அளிக்கிறோம் என்பது முக்கியம். முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என்ற பெயரை மோடி குறிப்பிடாததை அதிமுகவும் எடப்பாடி பழனிசாமியும் பெரிதாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. தமிழக வெற்றி கழகத்தின் மீது எந்த மதிப்பீடும் இல்லை; விஜய் ஒரு தலைவனே கிடையாது. ஏன் என்றால் கரூரில் 41 பேர் உயிரிழந்ததிற்கு அவர் இங்கு அழைத்துத் துக்கம் விசாரித்திருக்கக் கூடாது, அது மட்டுமே போதும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Vijay ,BJP ,Sarathkumar ,Chennai ,Equality People's Party ,2011 Legislative Assembly elections ,AIADMK… ,
× RELATED ரயில்கள் மீது கல்வீசும் நபர்கள் மீது...