×

பறவைக் காய்ச்சல் பரவலால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: பறவைக் காய்ச்சல் பரவலால் பொது மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. சென்னை, கிண்டி சிறுவர் பூங்காவில் கடந்த சில நாட்களாக பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்து வந்தன. இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், பூங்காவில் உள்ள பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சிறுவர் பூங்கா மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையோடு விலங்குகள் மற்றும் பறவைகளை கையாள வேண்டும். பறவை காய்ச்சல் பாதிப்பு 99.9 சதவீதம் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு இல்லை. எனவே, பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை. இறந்த அல்லது நோய்வாய்ப்பட்ட பறவைகளை வெறும் கையால் தொடக்கூடாது. இருமல், சளி, காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட பொதுவான அறிகுறிகளே எச்3 என்1 பறவைக்காய்ச்சல் அறிகுறிகளாக உள்ளது .

இந்த வகை பாதிப்பு கொண்டவர்கள் மருத்துவரை அணுக வேண்டும். பறவைகளை கையாள்பவர்கள் குறிப்பாக உடல்நலம் குன்றிய பறவைகளை கையாள்பவர்கள், இறந்த பறவைகளை கையாள்பவர்கள் மற்றும் இறைச்சி கூடத்தில் பணிபுரிபவர்கள் கவனத்துடன் பணிபுரிய வேண்டும். ஏதேனும் ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம்/ அரசு மருத்துவமனை/மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

அசாதாரண பறவை இறப்புகள் இருப்பின் உடனே கால்நடை மருத்துவ துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கைகளை கழுவுதல் உட்பட தன்சுத்தம் மற்றும் சுற்றுப்புறத்தினை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். முழுமையாக சமைக்கப்படாத மற்றும் சரிவர சமைக்கப்படாத முட்டை மற்றும் இறைச்சி வகைகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.

இறைச்சி கூடங்களில் பணிபுரிபவர்கள் இறைச்சி கழிவுகளை பொதுவெளியில் கொட்ட கூடாது. பண்ணை தொழிலாளர்கள் கையுறைகள், முகக்கவசம் (Mask) மற்றும் பூட்ஸ் காலணிகளை அணிய வேண்டும். பண்ணைகளில் கிருமிநாசினி (Disinfectant) தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இந்நோய் சம்பந்தமான வதந்திகளை நம்ப வேண்டாம் , கூடுதல் தகவல்களுக்கு தொலைபேசி எண். 104-ஐ தொடர்புகொள்ள வேண்டும்.

Tags : Department of Health ,Chennai ,Tamil Nadu Health Department ,Kindi Children's Park ,
× RELATED ரயில்கள் மீது கல்வீசும் நபர்கள் மீது...