×

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தல் இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.398, டீசல் ரூ.382: ஒரேநாளில் 25% உயர்வு

 

கொழும்பு: இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ஒரேநாளில் 25% உயர்த்தப்பட்டு, ரூ.398க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி தரும் விதமாக கச்சா எண்ணெய் எடுத்து செல்லப்படும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடி உள்ளது. இதனால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், விலையும் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், “மத்தியகிழக்கில் தொடரும் போர் இலங்கையின் எரிசக்தி விநியோகத்தை பாதிக்க கூடும். அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்” என இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
அத்துடன், கடந்த புதன்கிழமை(18ம் தேதி) முதல் இலங்கையில் ஒரு வாரத்துக்கு நான்கு வேலை நாள்கள் மட்டுமே என்ற உத்தரவை பிறப்பித்த அதிபர் அனுரகுமார திசநாயக, வீட்டில் இருந்தே பணியாற்றும் முறைக்கு நிறுவனங்கள் மாற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து இலங்கையில் கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை 8% உயர்த்தப்பட்டது. மேலும், பெட்ரோல் பயன்பாட்டை குறைக்கும் விதமாக ரேஷன் முறையில் பெட்ரோல் வழங்கவும் இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் இலங்கையில் நேற்று ஒரேநாளில் பெட்ரோல், டீசல் விலை 25% அளவுக்கு மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் ரூ.317ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.82 உயர்த்தப்பட்டு ரூ.398ஆக விற்பனையாகிறது. இதேபோல், டீசல் விலையும் 1 லிட்டருக்கு ரூ.79 அதிகரிக்கப்பட்டு, ரூ.382க்கு விற்பனை செய்யப்படுகிறது. மண்ணெண்யெய் லிட்டருக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ.255க்கு விற்பனையாகிறது. இந்த விலை அதிகரிப்பின் மூலம் 15 முதல் 20 சதவீதம் வரை எரிபொருள் பயன்பாடு குறைய வாய்ப்பிருப்பதாக இலங்கை பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என இலங்கை அரசு அறிவுறுத்தி உள்ளது. எரிபொருளை பதுக்கி வைப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Tags : Sri Lanka ,Colombo ,United States ,Israel ,Iran ,
× RELATED பாபநாசம் அருகே வாகன சோதனையில் ரூ.1...