பெரம்பூர்: மூலக்கடை பகுதியில் உள்ள கம்பெனியில் பாத்திரங்களை ஏற்றிச்செல்லும் லிப்ட் அறுந்துவிழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் சந்தீப். இவர் மூலக்கடை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை பகுதியில் ஸ்டீல் பாத்திரம் தயார் செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். இங்கு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அவரது உறவினர் நந்தாராம் (50) கடந்த 15 வருடங்களாக வேலை செய்துவந்துள்ளார். இந்த நிலையில், நேற்று மதியம் 12 மணியளவில் கம்பெனியில் வேலையாட்கள் அனைவரும் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ஸ்டீல் பாத்திரங்களை சிறிய லோடு ஏற்றும் லிப்டில் முதல் மாடிக்கு கொண்டு சென்றனர். அப்போது திடீரென லிப்ட் அறுந்து கீழே விழுந்ததில் கீழே பணியாற்றிக்கொண்டிருந்த நந்தாராம் இடுப்பின் மீது லிப்ட் விழுந்துஅமுக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை உடனடியாக திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று மாலை நந்தாராம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கொடுங்கையூர் எஸ்ஐ சீனிவாசன் தலைமையிலான போலீசார் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
