சென்னை: தமிழ்நாட்டில் தினமும் 530 பெண்கள் புதிய முதலாளிகளாக உதயமாகிறார்கள் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ”பெண்களின் கைகளில் பணம் புழங்கினால், அந்தப் பொருளாதாரம் நேரடியாக ஒரு குடும்பத்தை உயர்த்தும். பல குடும்பங்கள் உயர்ந்தால், மாநிலமே உயரும். மகளிரை வேலை தேடுபவர்களாக அல்லாமல், வேலை வழங்குபவர்களாக மாற்றுவதே தமிழ்நாடு அரசின் முக்கிய இலக்காகும். தந்தை பெரியார் மற்றும் கலைஞர் வழியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வகுத்தளித்த இந்த கொள்கை, இன்று களத்தில் மாபெரும் நிஜமாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் பொருளாதார சக்கரத்தை சுழற்றும் உந்துசக்தியாக தமிழ்நாட்டுப் பெண்கள் மாறியுள்ளதை, ஒன்றிய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள சமீபத்திய ‘உத்யாம்’ தரவுகள் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பறைசாற்றியுள்ளன. ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வப் பதிவுத்தளமான உத்யாம் 2024-25 தரவுகளின்படி, பெண்கள் உரிமையாளர்களாக உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் (MSME) நிறுவனங்களின் எண்ணிக்கையில், 9 லட்சத்து 4 ஆயிரத்து 572 நிறுவனங்களுடன் தமிழ்நாடு தேசிய அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து (தென்னிந்தியாவில் முதலிடம்) பிரமாண்ட சாதனை படைத்துள்ளது.
2021-22ம் ஆண்டில் (முந்தைய ஆட்சியின் முடிவில்) தமிழ்நாட்டில் பெண்கள் நடத்தும் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை வெறும் 1 லட்சத்து 26 ஆயிரத்து 397 ஆக மட்டுமே சுருங்கிப் போயிருந்தது. 2024-25ம் ஆண்டில் (தற்போதைய திமுக ஆட்சியில்) இந்த எண்ணிக்கை 9,04,572 ஆக அசுர வளர்ச்சி கண்டுள்ளது. அதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற இந்த குறுகிய நான்கு ஆண்டுகளில் மட்டும் புதிதாக 7 லட்சத்து 78 ஆயிரத்து 175 பெண்கள் புதிய தொழில்முனைவோர்களாக தரம் உயர்ந்துள்ளனர். இதை கணக்கிட்டுப் பார்த்தால், கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நாள்தோறும் சராசரியாக 530 பெண்கள் புதிய முதலாளிகளாக (Entrepreneurs) உருவெடுத்துள்ளனர் என்ற வியக்க வைக்கும் உண்மை புலப்படும். விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை மற்றும் அரசின் சிறப்புத் தொழில் கடன்களே இந்த மாபெரும் ‘மேஜிக்’ நிகழக் காரணமாகும். தொழில் முதலீடுகளில் முன்னணியில் இருப்பதாக சொல்லப்படும் வடமாநிலங்கள், பெண்களை தொழில்முனைவோர்களாக மாற்றுவதில் தமிழ்நாட்டிற்கு பல நூறு மைல்கள் பின்னால் நிற்கின்றன என்பதை ஒன்றிய அரசின் தரவுகளே அம்பலப்படுத்தியுள்ளன.
நாட்டின் முன்னணி தொழில் மாநிலம் எனப்படும் குஜராத்தில், வெறும் 2,83,973 பெண்கள் மட்டுமே நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இது தமிழ்நாட்டை விட 3 மடங்கு குறைவாகும். அதேபோல் இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசத்தில், வெறும் 2,27,640 நிறுவனங்கள் மட்டுமே மகளிரால் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டுப் பெண்கள் இன்று தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐடி), உணவுப்பதப்படுத்துதல், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, நவீன உற்பத்தித் துறைகள் என அனைத்துத் தளங்களிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளனர். ஒரு பெண் முதலாளியாக மாறும்போது, அவர் தன்னைச் சுற்றியுள்ள மேலும் பல பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ள ‘2030-க்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவோம்’ என்ற இமாலய இலக்கை அடைவதற்கு, இந்த 9 லட்சம் பெண் முதலாளிகளின் உழைப்பே மிக முக்கிய ஆணிவேராக அமையும் என்பதைச் சந்தேகமின்றிச் சொல்லலாம்.
