×

காடுகள் அழிப்பால் குறையும் பல்லுயிர் பெருக்கம்; இந்தியாவில் அழிவின் பிடியில் 10 லட்சம் அரிய உயிரினங்கள்: 33ல் இருந்து 23 சதவீதமாக குறைந்தது

நாம் வாழும் பூமியில் ஆயிரக்கணக்கான தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகள் மற்றும் பாசிகள் உள்ளன. இவை அனைத்தும் அரிய உயிரினங்கள் என்ற பட்டியலில் உள்ளன. மனிதகுலம் உயிர்வாழ்வதற்கு உயிரியல் பன்முகத்தன்மை என்பது மிகவும் அவசியம். இயற்கையின் இயல்பான நிகழ்வுகளுக்கும் அரிய உயிரினங்கள் துணைநிற்கிறது. அதே நேரத்தில் மனிதனால் நிகழ்த்தப்படும் வேட்டையாடுதல், நகரமயமாக்கல், சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற பல்வேறு காரணங்களால் அரிய உயிரினங்கள் அழிவின் பிடியில் சிக்கி வருகிறது. இயற்கை மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (ஐயூசிஎன்) உலகம் முழுவதும் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள், தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்கள் அழிந்து போகும் அபாயத்தில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற உயிரினங்களை பாதுகாப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் களமிறங்கியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் மூன்றாவது வாரத்தில் அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாப்பதற்கான தேசிய விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்தவகையில் நடப்பாண்டில் இன்று (16ம் தேதி) இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு ஆய்வு சார்ந்த தகவல்களை வெளியிட்டு வருகின்றனர் வனஉயிரின ஆர்வலர்கள்.

இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு வகையான தாவரங்கள், விலங்குகள், பாலூட்டிகள் மற்றும் பறவையினங்கள் என்று பன்முக உயிரினங்களை கொண்ட நாடாக திகழ்கிறது. இங்கு 89 தேசிய பூங்காக்களும், 400க்கும் மேற்பட்ட வனவிலங்கு சரணாலயங்களும் உள்ளன. அதேநேரத்தில் இங்கும் அரிய உயிரினங்கள் தொடர்ந்து அழிவின் பிடியில் சிக்கி வருகிறது. இதில் விலங்குகளை பொறுத்தவரை வங்கப்புலி, ஆசியசிங்கம், பனிச்சிறுத்தை, ஒற்றைக்ெகாம்பு காண்டாமிருகம், பிளாக்பக், சிங்கவால் மக்காக், ஒளிரும் மரத்தவளை, காஷ்மீரி ரெட்ஸ்டாக், நீலகிரி தஹர், இந்திய காட்டெருமை போன்றவை அழிவின் பிடியில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதேபோல் பறவைகள், பாசிகள், தாவரங்கள் என்று ஆயிரக்கணக்கான உயிரினங்களும் அழியும் நிலையில் தொடர்ந்து சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வனஉரியின மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் மேலும் கூறியதாவது: இந்தியாவை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக வாழ்விட இழப்பு என்பது காடுகளில் உள்ள உயிரினங்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. உலகளவில் சராசரியாக 33.3சதவீதம் வனப்பகுதி உள்ள நிலையில், இந்தியாவில் 21சதவீதம் அளவுக்கே வனப்பகுதிகள் உள்ளன. கடந்த 10ஆண்டுகளில் இந்தியாவில் 16லட்சம் ஹெக்டேருக்கு மேற்பட்ட மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது என்று உலக இயற்கை வளஅமைப்பின் ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து காடுகள் அழிக்கப்படுவதால் விலங்குகள், பறவைகள், பாசிகள், பூச்சிகள் என்று 10லட்சத்திற்கும் மேற்பட்ட அரிய உயிரினங்கள் அழிவின் விழிம்பில் சிக்கி இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகிறது.இந்த காடுகள் தான் தாவரங்கள்,விலங்குகள் மற்றும் நுண்ணுயிர்களுக்கு வாழ்விடமாக திகழ்கிறது. காடுகளை அழிக்கும் போது பல்லுயிர் பெருக்கமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இது மட்டுமன்றி ஓரினச்சேர்க்கை மூலம் கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சி பூமியின் காலநிலையை ஒழுங்கு படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு பல்லுயிர்களும் துணைநிற்கிறது.

இதேபோல் மண்அரிப்பு, நீர்சுழற்சி ேபான்ற இயற்கை பேரிடர்களுக்கும் காடழிப்பு என்பது காரணமாகிறது. எனவே காடுகளை காப்பதன் மூலம் மட்டுமே அரிய உயிரினங்களையும் காப்பாற்ற முடியும். பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் உயிரியல் பன்முகத்தன்மையால் வழங்கப்படும் சுற்றுச்சூழல் நடைமுறைகளை சார்ந்தே உள்ளது.நீடித்த வளர்ச்சி என்பதும் இயற்கை வளங்களை சிக்கனமான முறையில் திறம்பட பயன்படுத்துவதையே உணர்த்துகிறது.

தொழில்மயமாகி வரும் உலகில் இயற்கை வளங்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இயற்கை வளங்களை நம்பியுள்ள ஏழை, எளிய மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இயற்கை வளத்தை பாதுகாப்பது மிகவும் அவசியம் என்பது உலகளாவிய இலக்காக உள்ளது. இது நிறைவேற வேண்டும் என்றால் இந்த பூமியில் வாழும் பிற உயிர்களின் தேவையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

99 சதவீதம் அழிந்த பாறு கழுகு வகைகள்;
‘‘தமிழகத்தை பொறுத்தவரை கோவை, உதகமண்டலம், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் புலிகள், யானைகள், மான்கள் போன்றவை கடந்த சில ஆண்டுகளாக மனிதர்களின் அத்துமீறல்களால் இறப்பை தழுவி வருகிறது. இது மட்டுமன்றி நீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்களில் 40 சதவீதமும், பாலூட்டிகளில் 25 சதவீதமும், தாவரங்கள் 34 சதவீதமும், பறவைகள் 14 சதவீதமும், பவளப்பாறைகள் 33 சதவீதமும் அழிவின் விழிம்பில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இது மொத்த வனவிலங்குகளின் எண்ணிக்கையில் 27 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இயற்கையின் உணவுச்சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் பாறு கழுகு வகைகள் உலகளவில் 99 சதவீதம் அழிந்துவிட்டது. இதை நமது தமிழ்நாட்டில் பிணந்தின்னி கழுகுகள் என்று அழைத்து வருகிறோம்,’’ என்பதும் குறிப்பிடத்தக்கது.

நவீன வளர்ச்சிக்கு பிறகே அவலங்கள்;
இயற்கையின் சக்திகள் இன்னும் செயல்படுகின்றன. ஆனால் மனித நடவடிக்கைகள் இன்று உயிரினங்களை பாதிக்கும் விரைவான மற்றும் பரவலான சுற்றுச்சூழல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. 99சதவீதம் உயிரினங்கள் மனித நடவடிக்கைகளால் மட்டுமே அச்சுறுத்தலில் உள்ளன. இதில் பல உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கு தேவையான உயிரியல் மாற்றங்களை செய்ய முடியவில்லை. இதன் காரணமாகவும் முன்எப்போதும் இல்லாத வகையில் அதிகமான உயிரினங்கள் அழியும் அபாயத்தில் உள்ளது. 19ம் நூற்றாண்டில் இருந்து தான், உயிரினங்களின் இயற்கை சூழலுக்கு அவலம் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக மக்கள் தொகை அதிகரித்து நவீனவளர்ச்சிகள் உருவான பிறகு தான், அரிய உயிரினங்களை அழிப்பதும் அதிகளவில் நடந்து வருகிறது என்பது பல்லுயிர் சார்ந்த ஆய்வாளர்களின் ஆதங்கம்.

பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்;
உலகநாடுகளில் இல்லாத தனித்துவமான சில விலங்கினங்கள் இந்தியாவில் மட்டுமே உள்ளது. உலகின் பழைய குரங்கினமாக கருதப்படும் சிங்கவால்குரங்கு கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் காணப்படுகிறது. நீலகிரி வரையாடுகள் தமிழ்நாடு, கேரளாவில் உள்ளது. இது தென்னிந்தியாவின் தனித்துவ உயிரினமாக கருதப்படுகிறது. காஷ்மீர் கங்குல் எனப்படும் சிவப்பு மான்கள், உலகின் பழமையான உயிரினம் என்று கருதப்படும் கங்கைடால்பின், மணிப்பூரில் உள்ள சங்காய் எனப்படும் முன்மண்டைக்ெகாம்புடைய மான், இந்திய மூக்கு கொம்பன் எனப்படும் கண்டாமிருகம், மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படும் ராட்சத அணில் போன்றவை உலகில் வேறு எங்கும் இல்லை. இதை உணர்ந்தும் அரிய உயிரினங்களை நாம் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் என்கின்றனர் வனஉயிரின ஆர்வலர்கள்.

Tags : India ,earth ,
× RELATED இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு வரப்போகிறது..?