×

பாலியல் வழக்கில் 58 பெண்களுடன் தொடர்புடைய சாமியாருக்கு குடைபிடித்த மகளிர் ஆணைய தலைவி ராஜினாமா: மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

 

மும்பை: பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் சிக்கிய சாமியாருடன் தொடர்பில் இருந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா மாநில பெண்கள் ஆணையத் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் பகுதியில் அசோக் கராத் என்ற நபர் ‘கேப்டன்’ என்ற பெயரில் ஜோதிடராகவும் சாமியாராகவும் வலம் வந்தார். இவரிடம் ஆசி பெறச் சென்ற 27 வயது பெண் ஒருவரை, கடந்த 2022ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் போதை மருந்து கொடுத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சாமியார் அசோக் கராத் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், சாமியாரின் உதவியாளரிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 58 பெண்களை ரகசிய கேமரா மூலம் படம் பிடித்து அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரிய வந்தது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில பெண்கள் ஆணையத் தலைவராக இருந்த ரூபாலி சகான்கர் (தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கைதான சாமியார் அசோக் கராத்தின் கால்களை ரூபாலி சகான்கர் கழுவுதல், குடை பிடித்தல் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது.

ரூபாலி மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தன. இதையடுத்து, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அவரை நேரில் அழைத்து விளக்கம் கேட்டார். சாமியாரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தமக்கு தெரியாது என்று அவர் விளக்கம் அளித்த போதிலும், அரசியல் அழுத்தம் காரணமாக அவர் பதவி விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து ரூபாலி சகான்கர் கூறுகையில், ‘இந்த வழக்கில் நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்யவும், தார்மீக பொறுப்பேற்றும் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

தற்போது ஐபிஎஸ் அதிகாரி தேஜஸ்வி சத்புதே தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவினர், இந்த பாலியல் மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Women's Commission ,Maharashtra ,MUMBAI ,MAHARASHTRA STATE WOMEN'S COMMISSION ,SAMIYAR ,ASHOK KARAT ,NASHIK ,MAHARASHTRA STATE ,
× RELATED கங்கையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட...