×

ரூ.30 கோடியில் நான்கு வழிச்சாலை பணி தீவிரம் சின்னசேலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.1.98 கோடியில் பஸ்நிலையம் திறப்பு

*75ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய திராவிட மாடல் அரசு

சின்னசேலம் : சின்னசேலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ1.98 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டி திறக்கப்பட்டதுடன், ரூ.30 கோடியில் நான்கு வழிச்சாலை பணிகள் துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இதன்மூலம் சின்னசேலம் பகுதி மக்களின் 75 ஆண்டுகால கோரிக்கையை திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகராட்சி அந்தஸ்து பெற்ற சிறப்பு நிலை பேரூராட்சியாக சின்னசேலம் உள்ளது. சின்னசேலம் வழியாக சேலம், சென்னை போன்ற நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் பேருந்துகள் செல்கிறது. அதுமட்டுமல்லாமல் சின்னசேலத்தில் இருந்தும், சின்னசேலம் வழியாகவும் கச்சிராயபாளையம் உள்ளிட்ட பல்வேறு நகர, கிராம பகுதிகளுக்கு ஒரு நாளைக்கு 100 முறைக்குமேல் பேருந்துகள் வந்து செல்கிறது.

ஆனால் முன்பு பேருந்து நிலையம் குறுகலாக இருந்ததால், பேருந்துகள் நின்று செல்ல போதிய இடவசதி இல்லை. அதனால் சேலம், சென்னை செல்லும் பேருந்துகள் சாலை ஓரத்திலேயே நின்று சென்றது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இதனால் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள், பயணிகள், பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ் என பல்வேறு தரப்பினர் உதயசூரியன் எம்எல்ஏ, முதல் அமைச்சர்கள் வரை தொடர் கோரிக்கை வைத்தனர். அதன் பயனாக கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டத்தின்கீழ் ரூ.1.98 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு கடந்த ஓராண்டாக கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ்நிலையம் திறக்கப்பட்டது.

இந்த பஸ்நிலையம் பயன்பாட்டிற்கு வந்ததால் பேருந்துகள் பஸ்நிலையத்திற்குள் போதுமான நேரம் நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது. இதனால் பொதுமக்களும், பயணிகளும் தங்களது 75 ஆண்டுகால கோரிக்கையை திராவிட மாடல் திமுக அரசு ஆட்சியில் நிறைவேறியதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர்.

சின்னசேலம் நகரம் சென்னை- கோவை இடையில் உள்ளதால், ஆத்தூர், சேலம், ஈரோடு, கோவை, விழுப்புரம், கடலூர், தின்டிவனம், புதுச்சேரி, சென்னை போன்ற பெருநகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் பெரும்பாலும் சின்னசேலம் வந்துதான் செல்கிறது. அதுமட்டுமல்லாமல் கார், வேன், சரக்கு லாரி போன்ற வாகனங்களும், உள்ளூர் வாகனங்களும், பள்ளி, கல்லூரி பேருந்துகளும் இந்த நகர்புற சாலையின் வழியாகத்தான் செல்கிறது.

சின்னசேலம் நகர பகுதியில், அம்சாகுளம் சாலையில் இருந்து அண்ணா நகர் வரை தார் சாலை செல்கிறது. இந்த சாலை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்புவரை அகலமாக 100 அடி சாலையாக காணப்பட்டது. காலப்போக்கில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் மிகவும் குறுகி காணப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் இருந்ததுடன், அடிக்கடி விபத்துகளும், உயிர்பலி சம்பவங்களும் ஏற்பட்டது.

அதுமட்டுமல்லாமல் சின்னசேலம் நகர பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சாலையின் இருபுறமும் காய்கறி வாகனங்கள் மற்றும் வியாபார நோக்கத்தில் வாகனங்களை நிறுத்திக்கொண்டு வியாபாரம் செய்தனர்.

மேலும் சில கடைகளின் முன்பு மண் கொட்டி வைத்திருப்பதும், விறகுகளை கொட்டி வைத்திருப்பதும், நிரந்தரமாக வாகனங்களை நிறுத்தி வைத்துக்கொள்வது, பெயர் பலகைகளை சாலையோரம் வைப்பது போன்ற நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் சின்னசேலம் நகர மெயின் சாலையின் இருபுறமும் ஒதுங்கக்கூட இடம் இல்லாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் இந்த சாலையை மாநில நெடுஞ்சாலையாக மாற்றி, சென்டர் மீடியனுடன் கூடிய நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் மற்றும் அமைச்சர்கள் என பலரிடம் மனு கொடுத்து வந்தனர்.

இதையடுத்து சின்னசேலத்தில் அம்சாகுளம் முதல் அண்ணா நகர்வரை மாநில சாலையாக மாற்றி, ரூ.30 கோடி மதிப்பில் சென்டர் மீடியனுடன் கூடிய நான்கு வழிச்சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டதுடன் தற்போது சாலையோர ஆக்கிரமிப்புகள், மரங்கள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்கப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சின்னசேலத்தில் பஸ்நிலைய விரிவாக்கம், சென்டர் மீடியனுடன் நான்கு வழிச்சாலை என்ற இருபெரும் கோரிக்கை கடந்த 10 ஆண்டுகாலம் ஆட்சி செய்த அதிமுக ஆட்சியில் இருந்தபோதிலும், அப்போதைய அரசு செய்து தர எந்த முயற்சியும் செய்யவில்லை.

ஆனால் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தொடர் முயற்சியால், சின்னசேலம் பகுதி மக்களின் 75 ஆண்டுகால இரு பெரும் கோரிக்கையை நிறைவேற்றி தந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு, கே.என்.நேரு ஆகியோருக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த உதயசூரியன் எம்எல்ஏவுக்கும், சின்னசேலம் பேரூராட்சி நிர்வாகத்திற்கும் சின்னசேலம் பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags : Sinnesalum ,Dravitha Model Government ,Sinnesalam ,Sinsalom ,
× RELATED கரூர், திருச்சியில் சூறாவளிகாற்றுக்கு 10,000 வாழை மரங்கள் சேதம்