×

பறக்கும்படை வாகன சோதனையால் வியாபாரிகள் கடுமையாக பாதிப்பு

*பொருட்கள் கொள்முதல் செய்ய பஸ்களில் செல்கின்றனர்

விருதுநகர் : சட்டமன்ற தேர்தலையொட்டி நடந்துவரும் வாகன பரிசோதனையால் வியாபாரிகள் பொருட்கள் கொள்முதல் செய்ய வாடகை வாகனங்களில் செல்லாமல் பஸ்களில் சென்று வருகின்றனர்.தமிழகம் முழுவதும் வருகிற ஏப்.23ல் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.

இதற்கான அறிவிப்பு மார்ச் 15ல் வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. பல்வேறு நடத்தை விதிகள் இருந்தாலும் வாகன பரிசோதனையில் தேர்தல் கமிஷன் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

வாகனங்கள் மூலமாக எடுத்துச்செல்லப்பட்டு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செக் போஸ்ட்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீசார் தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

டூவீலர், கார், வேன், லாரி உள்ளிட்ட தனியார் வாகனங்கள் பகல் நேரங்களிலும், இரவு நேரங்களிலும் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. தென் மாவட்டங்களில் மளிகை, அரிசி, காய்கறிகள், இரும்பு பொருட்கள், ஸ்டேசனரி, பூ, பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் நடத்துபவர்கள் வெளி மாவட்டங்களிலேயே பொருட்கள் கொள்முதல் செய்கின்றனர்.

அதிகப்படியான வியாபாரிகள் மதுரை, விருதுநகரில் பொருட்களை கொள்முதல் செய்கின்றனர். கொள்முதல் செய்யும் பொருட்களுக்கான பணத்தை வியாபாரிகளில் பெரும்பாலானோர் நேரடியாக கொண்டு செல்கின்றனர். வங்கி மூலம் பரிமாற்றம் செய்வது கிடையாது. சொந்தமான அல்லது வாடகை சரக்கு வாகனங்கள், கார்களில் சென்று பொருட்களை கொள்முதல் செய்வது வழக்கம்.

இந்நிலையில் ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே பணம் கொண்டு செல்லலாம், அதற்கு மேல் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வியாபாரிகள் பணம் கொண்டு செல்லும்போது அதற்கான ஆவணங்களை வைத்திருக்க முடியாது. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமான வியாபாரிகள் பஸ்களில் சென்று கொள்முதல் செய்துவிட்டு பொருள்களை தனியார் லாரிகளில் வரும்படி புக்கிங் செய்கின்றனர். காய்கறி, இலை உள்ளிட்ட பொருள்களை பஸ்களில் சென்று கொள்முதல் செய்துவிட்டு அதன்பின்னர் வாடகை அல்லது சொந்த வாகனங்களில் பொருள்களை கொண்டு வருகின்றனர்.

வியாபாரிகள் கூறுகையில், கடைகளில் வியாபாரம் முடித்துவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு பொருட்கள் கொள்முதல் செய்வோம். இதற்கு எந்த ஆவணமும் இருக்காது. யாரிடமாவது கடன் பெற்று சென்றால் அந்தப்பணத்திற்கு எந்த ஆவணம் இருக்கும். வியாபார பணத்தை வங்கியில் செலுத்தி மீண்டும் அதை எடுத்துச்சென்றால் மட்டுமே ஆவணம் கொண்டு செல்ல முடியும். பணத்தை பறிமுதல் செய்து கொண்டு ஏதேனும் ஆவணம் கொண்டு வந்தால் மட்டுமே மீண்டும் வழங்குவர்.

இதனால் தேவையற்ற குழப்பம் ஏற்படும். கடந்த சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல்களில் வியாபாரிகள் அதிகம் பாதிக்கப்பட்டோம். இதனால் தனி வாகனங்களில் செல்லாமல் தற்போது பஸ்களில் சென்று பொருட்களை கொள்முதல் செய்கிறோம்.

அரசியல் கட்சிகளுக்காக செயல்படுத்தப்படும் நன்னடத்தை விதிமுறைகளால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். எனவே வியாபாரிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Virudhunagar ,Tamil Nadu ,
× RELATED தமிழக தேர்தல் பொறுப்பாளரும் ஒன்றிய...