×

நாடு முழுவதும் கடும் சிக்கல் சமையல் காஸ் தட்டுப்பாடு நீடிப்பு: முன்பதிவு செய்து பல நாட்கள் கடந்தும் சப்ளை இல்லை; வர்த்தக காஸ் முடக்கத்தால் ஏராளமான தொழில்கள் பாதிப்பு

புதுடெல்லி: சமையல் காஸ் தட்டுப்பாடு நீடிப்பதால் நாடு முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்பதிவு செய்து பல நாட்கள் கடந்தும் சப்ளை இல்லாததால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ஈரான் போரால் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வர்த்தக காஸ் சப்ளை ரத்து செய்யப்பட்டது. இதனால் ஓட்டல்கள், தொழில்நிறுவனங்கள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன. வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் சப்ளையும் தற்போது முடங்கி உள்ளது. முன்பதிவு செய்து பல நாட்கள் கடந்தும் சிலிண்டர் சப்ளை இல்லாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 3வது வாரமாக இந்த பாதிப்பு நீடித்து வருகிறது. இந்தியாவின் 60 சதவீத காஸ், கச்சா எண்ணெய் இறக்குமதிகளைப் பெறும் முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பயந்து போன மக்கள் பீதி அடைந்து சமையல் காஸ் முன்பதிவு செய்தனர். கடந்த மார்ச் 13 அன்று முன்பதிவு 87.7 லட்சமாக உச்சத்தை எட்டியது, ஆனால் அதன்பிறகு மெதுவாக குறைந்தது. மார்ச் 19 அன்று சுமார் 55 லட்சம் முன்பதிவுகள் செய்யப்பட்டன. போருக்கு முந்தைய காலத்தில் ஒரு நாளுக்கான சராசரி முன்பதிவு 50-55 லட்சமாக இருந்தது. அந்த நிலையை தற்போது எட்டியுள்ளது. இருப்பினும் எல்பிஜி விநியோக நிலைமை கவலையளிப்பதாகவே உள்ளது. ஆனால் எந்தவொரு எல்பிஜி விநியோகஸ்தரிடமும் தட்டுப்பாடு இல்லை. கடந்த வாரத்தில், 11,300 டன் வர்த்தக எல்பிஜி வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

கடந்த இரண்டு வாரங்களில் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி 40 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. 3 பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களும் போருக்கு முந்தைய கால அளவிலான தினசரி எல்பிஜி விநியோகங்களைச் செய்து வருகின்றன. இதனால் எல்பிஜி சிலிண்டர் விநியோகம் வழக்கம் போல் தொடர்கிறது. கள்ளச்சந்தை மற்றும் பதுக்கலைக் கட்டுப்படுத்த, சோதனைகளும் திடீர் ஆய்வுகளும் தொடர்கின்றன. நேற்று மட்டும் 4,500 சோதனைகள் நடத்தப்பட்டன, அதே நேரத்தில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் நிலையங்கள் மற்றும் எல்பிஜி விநியோகஸ்தர்களிடம் 1,800 திடீர் ஆய்வுகளை மேற்கொண்டன. கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்தை அமைக்குமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

இருப்பினும் நிலைமை இன்னும் கவலையளிப்பதாக உள்ளது. எனவே முன்பதிவு செய்த பிறகு, தங்களின் சிலிண்டர் வருகைக்காக பொதுமக்கள் உரிய காலம் வரும் வரை காத்திருக்க ஒன்றிய அரசு வலியுறுத்தி உள்ளது. மேலும் சமையல் எரிவாயுவான எல்பிஜி மீதான அழுத்தத்தைக் குறைக்க மக்கள் மாற்று எரிபொருட்களையும் ஆராய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் குழாய்வழி இயற்கை எரிவாயுவிற்கு மாற வேண்டும். இதுவரை புதியதாக 13,700 குழாய் இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 7,000 நுகர்வோர் எல்பிஜியிலிருந்து குழாய்வழி இயற்கை எரிவாயுவிற்கு மாறியுள்ளனர் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

* பஹ்ரைன் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு
வளைகுடா தாக்குதல் தொடர்பாக பஹ்ரைன் மன்னர் ஹமாத் பின் ஈசா அல் கலீபாவுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி பேசினார். மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலவரம் குறித்து அவருடன் விவாதித்தபோது, அப்பகுதியில் உள்ள எரிசக்தி மற்றும் குடிமை உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை அவர் கண்டித்தார். மேலும் கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரத்தை உறுதி செய்வதும், கப்பல் வழித்தடங்களைத் திறந்த மற்றும் பாதுகாப்பான நிலையில் வைத்திருப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.

இதுபற்றி தனது எக்ஸ் பதிவில் பிரதமர் மோடி கூறுகையில்,’பஹ்ரைன் மன்னர் ஹமாத் பின் ஈசா அல் கலீஃபாவுடன் பயனுள்ள கலந்துரையாடல் நடைபெற்றது. அவருக்கும் பஹ்ரைன் மக்களுக்கும் ஈத் அல்-பித்ர் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். மேலும் மேற்கு ஆசியப் பிராந்தியத்தின் தற்போதைய நிலவரம் குறித்து நாங்கள் விவாதித்தோம். வளைகுடா பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி மற்றும் குடிமை உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைக் கண்டிப்பதோடு, அவை உலகளாவிய உணவு, எரிபொருள் மற்றும் உரப் பாதுகாப்பில் ஏற்படுத்தும் பாதகமான தாக்கத்தையும் பற்றி ஆலோசனை நடத்தினோம். மேலும், பஹ்ரைனில் உள்ள இந்திய சமூகத்தின் நலனுக்காக மன்னர் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்காக நன்றி தெரிவித்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்கியதிலிருந்து, மோடி பஹ்ரைன் மன்னருடன் பேசுவது இது இரண்டாவது முறையாகும்.

* வணிக, வர்த்தகக் கப்பல்களின் பயணம் மதிக்கப்பட வேண்டும் இந்தியா வலியுறுத்தல்
மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழல் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த இந்தியா, பேச்சுவார்த்தையின் மூலம் பதற்றத்தைத் தணிக்க அழைப்பு விடுத்துள்ளது; அதே வேளையில், சர்வதேச சட்டத்திற்கு இணங்க, வணிக மற்றும் வர்த்தகக் கப்பல்களின் வழிசெலுத்தல் உரிமைகளும் சுதந்திரங்களும் மதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் லண்டனில் நடந்த சர்வதேச கடல்சார் அமைப்பின் கவுன்சிலின் 36-வது சிறப்பு அமர்வில் உரையாற்றிய, இங்கிலாந்திற்கான இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி, ‘வணிகக் கப்பல்களைக் குறிவைப்பதும், அதில் உள்ள பொதுமக்களான பணியாளர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதும், ஹார்முஸ் நீரிணை உட்பட சர்வதேச கடல்வழிகள் வழியாக நடைபெறும் பாதுகாப்பான மற்றும் தடையற்ற வழிசெலுத்தலைத் தடுப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அனைத்து கடல்சார் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். தற்போதைய நெருக்கடியால் சுமார் 23,000 இந்தியக் கடல்சார் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது’ என்றார்.

ஒர்க் பிரம் ஹோம் நோ விமான பயணம் சர்வதேச எரிசக்தி முகமை பரிந்துரை
உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், சமையல் காஸ் பாதிப்பு தொடர்வதால் பல்வேறு கட்டுப்பாடுகளை மேற்கொள்ள சர்வதேச எரிசக்தி முகமை வலியுறுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
* உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அதிர்ச்சியின் தாக்கத்தைத் தணிக்க உடனடி தேவை சார்ந்த நடவடிக்கைகளை மட்டுமே செய்ய வேண்டும்.
* வீட்டிலிருந்து பணிபுரிதல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
* நெடுஞ்சாலைகளில் வாகன வேகத்தை மணிக்குக் குறைந்தது 10 கி.மீ அளவிற்குக் குறைக்க வேண்டும். பொதுப் போக்குவரத்து மற்றும் ஒரே வாகனத்தில் பலரும் பயணித்தல் முறைகளை தொடங்க வேண்டும்.
* முக்கிய நகரங்களில் தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் வாகனம் ஓட்டும் திறனை மேம்படுத்த வேண்டும்.
* வணிக விமானப் பயணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். தேவையற்ற விமான பயணத்தை தவிர்க்க வேண்டும்.
* அத்தியாவசியமற்ற பயன்பாடுகளுக்கு சமையல் காஸ் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
* கார்களில் பெட்ரோல், டீசல் போடுவதை 2 முதல் 6 சதவீதம் வரை குறைக்க வேண்டும். தனிப்பட்ட ஓட்டுநர்களுக்கு சராசரியாக சுமார் 20 சதவீதம் வரை குறைக்க வேண்டும்.
* கனரக சரக்கு லாரிகளை குறைந்த வேகத்தில் இயக்கி 5 சதவீதம் வரை டீசலை சேமிக்க வேண்டும்.

Tags : New Delhi ,Iran ,
× RELATED டெல்லி, அரியானாவில் எய்ட்ஸ் தடுப்பு...