புதுடெல்லி: போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில், பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் தாக்குதலுக்கு பதிலடியாக கச்சா எண்ணெய் எடுத்து செல்ல பயன்படும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடி உள்ளது. இதனால் உலக நாடுகளில் சமையல் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை தடுக்க ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் முன்னணி எண்ணெய் நிறுவனங்களான எச்பிசிஎல், பிபிசிஎல் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் தங்களின் பிரிமீயம் அல்லது உயர்தர பெட்ரோல் மற்றும் தொழிற்சாலைகளுக்கு விற்கப்படும் டீசல் விலைகளை உயர்த்தி உள்ளன. இந்த விலை உயர்வானது நேற்று முதலே நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் எச்சிபிஎல் நிறுவனத்தின் பவர் பெட்ரோல், பிபிசிஎல் நிறுவனத்தின் ஸ்பீடு பெட்ரோல் மற்றும் ஐஓசிஎல் நிறுவனத்தின் எச்பி-95 பெட்ரோல் விலையானது லிட்டருக்கு ரூ.2.09ல் இருந்து ரூ.2.35 வரை அதிகரித்துள்ளது. இதேபோல் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்படும் மொத்த விற்பனை டீசல் விலை ரூ.22 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒன்றிய இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா கூறுகையில், “சாதாரண பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றங்களும் இல்லை. பிரீமியம் பிரிவில் சிறிதளவு மட்டுமே விலை உயர்ந்துள்ளது. இது(நாட்டில் விற்கப்படும்) மொத்த பெட்ரோலில் 2-4 சதவீதம் மட்டுமே. மேலும் எண்ணெய் நிறுவனங்களாலேயே இந்த விலை உயர்வு நிர்ணயிக்கப்படுகிறது. அரசு எந்த விலையையும் உயர்த்தவில்லை.
அனைத்து நுகர்வோருக்கும எரிசக்தியை கிடைக்க செய்வதே அரசின் முன்னுரிமை. இந்த நெருக்கடி காலம் முழுவதும் அரசாங்கம் அதை செய்து வருகிறது. இதுவரை எந்த விலையையும் அரசு உயர்த்தவில்லை” என்றார்.
