மார்த்தாண்டம், மார்ச் 21: குமரி மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் வெயிலின் நின்று பணியை செய்கின்றனர். இதனை தொடர்ந்து போக்குவரத்து போலீசாருக்கு தினமும் தர்பூசணி, ஜூஸ் வழங்க வேண்டும் என மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் போக்குவத்து போலீசாருக்கு தர்பூசணி, ஜூஸ் மற்றும் இளநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம் போலீசாருக்கு ஜூஸ், பழங்களை வழங்கினார். இதில் போக்குவரத்து எஸ்ஐ செல்லசாமி, ஓய்வு பெற்ற போக்குவரத்து எஸ்ஐ கிருஷ்ணகுமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் குழித்துறை, களியக்காவிளை, வெட்டுவெந்நி போன்ற முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
