சேலம், மார்ச் 21: சேலத்தில் போக்சோ வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தொழிலாளியை புதுச்சேரியில் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் சிவா (45), தொழிலாளி. இவர் மீது சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த 2017ம் ஆண்டு போக்சோ வழக்கு பதிவானது. சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அவரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இந்த போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சிவா, அதன்பின் சேலம் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால், சிவாவை கைது செய்து ஆஜர்படுத்த சேலம் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இதன்பேரில் அவரை கைது செய்ய போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தேர்தல் நேரம் என்பதால், தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி, தனிப்படை அமைத்தார். எஸ்.ஐ., பாரதிராஜா தலைமையில் சிறப்பு எஸ்ஐ கோவிந்தன், ஏட்டுகள் சக்தி, இர்பான் ஆகியோர் அடங்கிய அத்தனிப்படை போலீசார், 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் சிவா பற்றி தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர், புதுச்சேரியில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வருவதை கண்டறிந்தனர். இதன்பேரில் தனிப்படை போலீசார், புதுச்சேரிக்கு சென்று சிவாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை சேலத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணைக்கு பின் சிவாவை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.
