×

“ஈகைப் பண்போடு ‘ரமலான்’ கொண்டாடும் இசுலாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : “ஈகைப் பண்போடு ‘ரமலான்’ கொண்டாடும் இசுலாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!”என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “நோன்பை முடித்து, புத்தாடை அணிந்து, அன்பை அனைவரோடும் பகிர்ந்து கொள்ளும் இசுலாமிய உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்களில் ஒருவனின் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்.

வரலாற்றில் நாம் கண்ட பெரும் புரட்சியாளர்களில் ஒருவரும், சமத்துவத்தின் திருவிளக்குமான நபிகள் நாயகத்தின் நெறியில் வாழ்ந்து வரும் இசுலாமியச் சகோதரர்களுக்கு என்றும் அரணாக நமது திராவிட முன்னேற்றக் கழகமும், கழக அரசும் திகழ்ந்து வருகின்றது. கல்வி, வேலைவாய்ப்புகள், பொருளாதாரம், அரசியல் பிரதிநிதித்துவம், மதச் சுதந்திரம் என அனைத்து நிலைகளிலும் சிறுபான்மைச் சகோதரர்களுக்கான சமூகநீதியை நிலைநாட்டி இருக்கிறது.

இசுலாமிய மக்களுக்கு எதிரான சட்டங்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டுவரும்போதெல்லாம் மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அவற்றை எதிர்த்துக் கடுமையாகப் போராடி வருவதுடன், சட்டமன்றத் தீர்மானங்கள் வாயிலாகவும் நமது நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தி வருகிறோம்.

மதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்று நாம் செயல்படுவதால்தான், அனைத்துத் தரப்பு மக்களும் நம்மைத் தொடர்ந்து ஆதரித்து வருகிறார்கள்.

இந்தியாவில் பிற மாநிலங்களில் எல்லாம் வெறுப்பு விதைகள் தூவப்பட்டு, நாள்தோறும் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையிலும் தமிழ்நாடு நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது. எல்லாருக்கும் எல்லாம் என்ற வழியில் நடைபோடும் நமது அரசு அனைவரது பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிசெய்துள்ளது.

கடந்த 5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில், பல சிறப்பு அறிவிப்புகளையும், சென்னையில் ஹஜ் இல்லம், தொன்மையான பள்ளிவாசல்கள் – தர்காக்கள் புனரமைப்பு, இசுலாமிய மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகைகள் உள்ளிட்ட திட்டங்களையும் நிறைவேற்றி வந்திருக்கிறோம் இப்படி என்றும் உங்களில் இருந்து பிரிக்க முடியாத சொந்தமாக உறவாடும் அன்போடு, ஈகைப் பண்போடு ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இசுலாமியப் பெருமக்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Ramadan ,Eid ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Muslims ,MLA. ,
× RELATED 1 லட்சம் பிரசவத்தில் 140 பேர் இறப்பு.....