×

எடப்பாடியால் எட்ட முடியாத: ஜெயலலிதா

பார்முலா…! ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிமுக எம்எல்ஏக்கள் ஒன்றுகூடி சசிகலாவை சட்டமன்ற குழு தலைவராக முதல்வர் பதவிக்கு தேர்வு செய்தனர். ஆனால், பாஜவின் தலையீட்டால் முதல்வர் பதவியை ஏற்க முடியாமல் சசிகலா சிறைவாசம் சென்றார். இதனால் தனக்கு பதில் நம்பிக்கைக்கு உரிய ஒருவரை முதல்வராக்க நினைத்த சசிகலா, கூவத்தூர் விடுதியில் வைத்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்தார். ஜெயலலிதா இருந்த இடத்தில் அமர்ந்த எடப்பாடி தன்னையும் ஜெயலலிதா போல நினைத்துக் கொண்டு தனது வேலையை காட்டத் துவங்கினார். இரட்டைத் தலைமையை ஒழித்து, தனது கட்டுப்பாட்டின் கீழ் கட்சியை கொண்டு வந்தார்.

இதன்பிறகு ஜெயலலிதாவைப் போல தன்னையும் கறாரானவராக காட்டிக் கொள்ள நினைத்த எடப்பாடி பழனிசாமி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுடன் கூட்டணி இல்லை என அதிரடியாக அறிவித்தார். அந்த தேர்தலில் அதிமுகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. குறிப்பாக பல இடங்களில் மூன்றாம் இடமும், சில தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் நிலையும் ஏற்பட்டது. சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கிய நிலையில் பாஜவுடன் கூட்டணி இல்லை என முதலில் கூறிய எடப்பாடி பழனிசாமியை, அமித்ஷா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார். இதன்பிறகு பாஜவுடன் கூட்டணி என எடப்பாடி அறிவித்தார்.

இதில், தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் கூட்டணி ஆட்சி என்றும் பலவிதமான கருத்துகள் உலவி வந்தன. அதே நேரம் தங்கள் கூட்டணிக்கு பெரிய, பெரிய கட்சிகள் வருவதாக கூறினார். இதுவரை எந்த பெரிய கட்சியும் வந்தபாடில்லை. இப்படிப்பட்ட சூழலில் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப். 24ம் தேதி அதிமுக சார்பில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை எப்படியாவது வெளியிட எடப்பாடி திட்டமிட்டார். ஆனால், இன்றுவரை கூட்டணி தொடர்பாக எந்தவொரு இறுதி முடிவிற்கும் அவரால் வரமுடியவில்லை.

திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகள் இறுதியான நிலையில், கிட்டதட்ட தொகுதி பங்கீடும் இறுதியாகும் நிலையில் உள்ளது. ஆனால், அதிமுக கூட்டணி இன்று வரை இறுதி வடிவம் பெறவில்லை. அதே நேரம் இருக்கும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்தும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால், ஜெயலலிதா பாணியில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வௌியிட நினைத்த எடப்பாடி பழனிசாமி, இன்னும் கூட்டணியையே இறுதி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இவர்தான் வேட்பாளர் என முடிவான தொகுதிகளைக் கூட அறிவிக்க முடியாத நிலையில் உள்ளார்.

தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்து விட்டது. நடத்தை விதிகளும் அமலாகிவிட்டன. தேஜ கூட்டணி சார்பில் தொகுதி பங்கீடு பேச்சு நடந்தது… ஆனால், நடக்கவில்லை என்பது போலத்தான் நிலவரம் இருக்கிறது. ஜெயலலிதா பாணியில் அதிரடியாக கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும், கூட்டணியையும் இறுதி செய்யவும் நினைத்த எடப்பாடியால், பாஜவையும், அமித்ஷாவையும் மீறி சின்னதாகக் கூட முடிவு எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

* என்டிஏவுடன் கூட்டணியும் பேசல; துணை முதல்வர் பதவியும் கேட்கல; சத்தியம் போட்டு சொல்லும் செங்கோட்டையன்
கோவை விமான நிலையத்தில் தவெக உயர் மட்ட மாநில குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: டெல்லியில் நடந்த விசாரணையில் தவெக தலைவர் விஜய் உரிய பதிலை அளித்து உள்ளார். முதல்வராக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைத்தையும் விட்டு மக்கள் பணிக்காக அரசியலுக்கு வந்து உள்ளார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அதிக அளவில் திரண்டு வருவது, தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்பதை காட்டுகிறது. மாற்றத்தை கொண்டு வரக் கூடிய திறன் விஜய்க்கு மட்டுமே உள்ளது.

234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடக் கூடிய சிறந்த வேட்பாளர்கள் தவெகவில் உள்ளனர். தவெக மற்றும் என்டிஏ கூட்டணி குறித்து இதுவரை எந்தவிதமான கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார். என்டிஏ கூட்டணியில் விஜய்க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்ற தகவல் குறித்த கேள்விக்கு, ‘‘விஜய் முதல்வராக வர வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அனைத்தையும் விட்டு அரசியலுக்கு வந்து உள்ளார். எனவே துணை முதல்வர் என்ற பேச்சுக்கே இடமில்லை. தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு மக்கள் இவ்வளவு அதிகமாக ஆர்ப்பரித்து வருவது இதற்கு முன் பார்த்ததில்லை’’ என்றார்.

* திருப்பூர் வடக்கு தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்த செங்ஸ்
கோபி தொகுதியில் நேற்று முன்தினம் இரவு செங்கோட்டையன் தேர்தல் பரப்புரையை தொடங்கினார். வேட்டைகாரன்கோயில், நஞ்சகவுண்டன்பாளையம் உள்ளிட்ட பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, செங்கோட்டையன் பேசும்போது, ‘‘தவெகவை கூட்டணியில் சேர்க்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் விஜய்யை முதலமைச்சராக ஏற்றுக்கொள்பவர்களுடன்தான் கூட்டணி. கட்சிகள் நடத்திய ஆய்வில் விஜய்தான் முதலிடத்தில் இருப்பதாகவும், திரை உலகில் உச்சத்தில் இருந்த ஒருவர் அதை விட்டுவிட்டு தமிழக மக்களை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ள ஒரே தலைவர் விஜய்தான். வரும் சட்டமன்ற தேர்தலில் திருப்பூர் வடக்கு தொகுதியில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சத்தியபாமா போட்டியிட உள்ளார்’’ என்றார்.

* கணிசமான பணம் தர்றோம் சின்னம்மா கட்சிக்கு வாங்க…
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் அமமுக கூடாரம் காலி ஆகி வருதாம். இவர்கள் அஇபுதமமுக (அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்) என்ற சின்னம்மா கட்சியில் சேர்ந்து வருகிறார்களாம். குடியாத்தம் தொகுதியில் அமமுகவுக்கு செல்வாக்கு இருந்தது. இங்கே 2021 தேர்தலுக்கு பிறகு குக்கர் கட்சியில் இருந்த பலரும் மீண்டும் அதிமுகவிலும் பல்வேறு கட்சியிலும் இணைந்து விட்டனர். தற்போது வெகு சிலரே இருக்கின்ற நிலையில், இவர்களும் சசிகலா துவங்கிய கட்சியில் இணைந்து வருகின்றனர். ஆரம்பகால உறுப்பினரான குடியாத்தம் கருப்பு செல்வம் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் சென்னையில் உள்ள சசிகலா வீட்டுக்கு சென்று அவர் துவங்கி உள்ள கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

அதோடு, கடந்த சில தினங்களாக குக்கர் கட்சியில் அதிருப்தியில் உள்ளவர்களையும் இலைக் கட்சியில் பதவி இல்லாதவர்களையும் நேரடியாக சந்தித்து சசிகலா கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். இவர்கள் வாட்ஸ் அப் குழு துவங்கி உள்ளனர். சின்னம்மா சசிகலா துவங்கி உள்ள கட்சியில் இணைந்தால் தங்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து வருகின்றனர். மேலும் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் கணிசமான பணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்து வருகிறார்களாம். இதனால் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் அமமுக கூடாரமே காலி ஆகி உள்ளதாம். கூட்டணி சேர்ந்த நேரத்தில இப்படி ஆயிடுச்சேன்னு ரத்தத்தின் ரத்தங்களும் கவலையோட இருக்கிறாங்களாம்.

Tags : Weedapadi ,Jayalalitha ,Jayalalithaa ,Sasikala ,Bajaj ,
× RELATED திமுக இருக்கும் வரை பாஜகவின் திட்டம்...