பெரம்பூர்: சென்னை கொடுங்கையூரில் குப்பை கொட்டும் வளாகம் உள்ளது. 333 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குப்பைமேடு பகுதியில் 252 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. இதனை பயோ மைனிங் செய்யும் முறை கடைபிடிக்கப்பட்டு குப்பைகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நேற்று மதியம் ஒரு மணி அளவில் திடீரென குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
‘’குப்பைமேடு பகுதியில் வெயில் காலங்களில் வெப்பம் காரணமாக குப்பை தீப்பற்றி எரிகிறது. சிலநேரங்களில் குப்பைமேடு பகுதிக்குள் அத்துமீறி குப்பை பொறுக்கவரும் நபர்கள் இரும்பு,செம்பு உள்ளிட்ட உலோகங்களை எடுப்பதற்காக குப்பைகளை தீ வைத்து எரித்துவிடுகின்றனர். இதனால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது’’ என்று மக்கள் தெரிவித்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
