சென்னை: தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அகில இந்திய அளவில் தமிழ்நாடு உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கையில் 47 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 2708 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நியமனம் செய்வதற்கு அரசால் அனுமதித்து ஆணை வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில், உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையின்படி, பணிநாடுநர்களால் இணையவழி வாயிலாக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 61 பாடப் பிரிவுகளுக்கான 2708 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் அன்று நடத்தப்பட்டு, முதற்கட்டமாக 4 பாடப் பிரிவுகளுக்கு மட்டும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் பணிகள் நிறைவு பெற்று, பணிநாடுநர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நான்கு பாடப்பிரிவுகளில் 5 நபர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மீதமுள்ள பணியிடங்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நடத்தி, தெரிவு செய்யப்படும் நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் விரைவில் வழங்கப்படும்.
