- எங்களுக்கு
- தாக்குதல்
- கார்க் தீவு
- ஈரான்
- புஜைரா
- துபாய்
- ஐக்கிய மாநிலங்கள்
- வேந்தர்
- டிரம்ப்
- ஐக்கிய அரபு நாடுகள்
துபாய்: ஈரான் பொருளாதாரத்தின் உயிர்நாடியான கார்க் தீவில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. அடுத்ததாக அங்குள்ள எண்ணெய் கட்டமைப்புகள் குறிவைக்கப்படும் என அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு பதிலடியாக ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள புஜைரா துறைமுகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போர் 15வது நாளாக நேற்றும் நீடித்தது. தன் மீதான தாக்குதலுக்கு அழுத்தம் தர முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது.
அவ்வழியாக செல்லும் அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாட்டு கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் சீர்குலைந்துள்ளது. இந்நிலையில், ஹார்முஸில் தாக்குதல்கள் நடத்துவதை தடுக்க ஈரான் பொருளாதாரத்தின் உயிர்நாடியான கார்க் தீவின் மீது அமெரிக்கா கை வைத்துள்ளது. புஷேர் மாகாணத்தின் அருகே பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள கார்க் தீவில் அமெரிக்கா நேற்று பயங்கர வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில், 15 வெடிப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் கார்க் தீவில் கடற்படை சுரங்க சேமிப்பு வசதிகள், ஏவுகணை சேமிப்பு பதுங்கு குழிகள், வான் பாதுகாப்பு வசதி, கடற்படை தளம், விமான நிலைய கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் ஹேங்கர் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க தீவின் ராணுவ நிலைகளை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 90 ராணுவ நிலைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் கூறி உள்ளது. இதில், அங்குள்ள எண்ணெய் கட்டமைப்புகள் எதுவும் சேதம் அடையவில்லை. தாக்குதலுக்குப் பிறகும் எண்ணெய் விநியோகம் தடையின்றி நடந்து வருவதாக ஈரான் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.
கார்க் தீவில் கைவைத்தால் அனைத்து கட்டுப்பாடுகளையும் கைவிட வேண்டியிருக்கும் என ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் விடுத்திருந்த எச்சரிக்கையையும் மீறி அமெரிக்கா அங்கு தாக்குதல் நடத்தியிருக்கிறது. இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘ஈரானின் மணி மகுடத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளோம். இப்போதைக்கு அங்குள்ள ராணுவ தளங்கள் மட்டும் அழிக்கப்பட்டுள்ளன. எண்ணெய் கட்டமைப்புகளை விட்டு வைத்துள்ளோம். ஈரான் அல்லது வேறு யாராவது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வதில் தலையிட்டால், கார்க் தீவின் எணணெய் கட்டமைப்புகளை அழிக்க வேண்டாம் என்ற முடிவை மறுபரிசீலனை செய்வேன்’’ என கூறி உள்ளார்.
ஈரானின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் 90% கார்க் தீவில் இருந்துதான் நடக்கிறது. இங்கு ஆண்டுக்கு 95 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கார்க் தீவை அமெரிக்கா குறிவைத்திருப்பது ஈரானை மிகவும் ஆத்திரப்படுத்தி உள்ளது. இதனால் நேற்று அபுதாபியின் அல் தப்ரா, குவைத்தின் அல் அதிரி, பக்ரைனின் ஷேக் இசா ஆகிய அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தொடர்ச்சியாக பல அலைகளாக தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் கடற்படை தலைவர் அட்மிரல் அலிரேசா டாங்சிரி தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள மிக முக்கியமான புஜைரா துறைமுகம் மீதும் ஈரான் ஏவுகணை, டிரோன் வீசி தாக்குதல் நடத்தியது. இவை இடைமறித்து அழிக்கப்பட்ட நிலையில் அதன் சில துண்டுகள் துறைமுகத்தின் எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் மீது விழுந்ததில் கடும் தீ விபத்து ஏற்பட்டது. துறைமுகத்தில் தீ கொளுந்து விட்டு எரியும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியே புஜைரா துறைமுகம் அமைந்துள்ளது. இதனால் ஹார்முசை தவிர்ப்பதற்கான முக்கிய துறைமுகமாக புஜைரா உள்ளது.
உலகின் 3வது பெரிய துறைமுகமாக புஜைராவில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சேமிப்பகங்கள் அமைந்துள்ளன. டிரோன் தாக்குதலைத் தொடர்ந்து புஜைராவில் சில எண்ணெய் ஏற்றுமதி செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை ஈரானின் 15,000 ராணுவ இலக்குகள் குறிவைக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத் கூறி உள்ளார். நாள் ஒன்றுக்கு 1000 ராணுவ இலக்குகள் அழிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
* அமெரிக்க தூதரகம் மீது பயங்கர தாக்குதல்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஆதரவு அமைப்புகள் நேற்று பயங்கர தாக்குதலை நடத்தின. ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தூதரகத்தில் இருந்த ஹெலிபேட் சேதமடைந்துள்ளது. தூதரகத்தில் இருந்து தீப்பிழம்பு, கரும்புகை வரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. முன்னதாக இந்த தூதரகம் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க தூதரகத்தில் இருந்து எந்த கருத்தும் கூறப்படவில்லை.
* 84 ஈரானிய வீரர்களின் உடல்கள் தனி விமானத்தில் அனுப்பி வைப்பு
கடந்த வாரம் புதனன்று இலங்கையின் தெற்கு கடற்கரைப் பகுதியான காலிக்கு அருகே இந்தியாவில் பயிற்சியில் பங்கேற்று திரும்பிய ஈரானின் கடற்படை கப்பலான ஐஆர்ஐஎஸ் டேனா கப்பல் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலால் மூழ்கடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சுமார் 84 ஈரான் வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக இலங்கை அறிவித்து இருந்தது. இதனையடுத்து 84 வீரர்களின் உடல்கள் நேற்று முன்தினம் ஈரான் தூதரகம் வாயிலாக அனுப்பிவைக்கப்பட்டது. ஈரான் ஏற்பாடு செய்திருந்த துருக்கி விமானத்தின் மூலமாக வீரர்களின் உடல்கள் ஈரான் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
* கூடுதல் படையை அனுப்பிய அமெரிக்கா
ஈரானுக்கு எதிரான போர் 2 வாரங்களை கடந்த நிலையில், மேலும் 2,500 கடற்படை வீரர்கள் மற்றும் நீர்-நிலம் தாக்குதல் கப்பலை மத்திய கிழக்குக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
15 நாள் போரில்
பலி எண்ணிக்கை
ஈரான் 1,444
லெபனான் 773
இஸ்ரேல் 14
யுஏஇ 6
பக்ரைன் 2
சவுதி 2
குவைத் 6
ஓமன் 3
அமெரிக்க வீரர்கள் 11
ஈராக் 26
* நுழைய முடியாத ரகசியத் தீவு
ஈரானின் எண்ணெய் வயல்களின் மையப்புள்ளியாக கார்க் தீவு உள்ளது. கச்சா எண்ணெயைச் சேமிப்பதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் இது ஒரு முக்கியமான தளம். இதனால் எண்ணெய் வயல்களுக்கு பாதுகாப்பான ராணுவ தளங்களையும் ஈரான் அமைத்துள்ளது. வெறும் 8 கிமீ நீளமும் 4.5 கிமீ அகலமும் கொண்ட இத்தீவில் யாரும் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது. தீவை சுற்றி இரும்பு வேலிகளும், ராணுவ கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டிருக்கும். இது ஒரு தடை செய்யப்பட்ட தீவாக உள்ளது. இதனால் இதை ரகசியத் தீவு என்றும் அழைக்கின்றனர். இந்த தீவை ஒட்டியே ஆழமான கடல் பகுதிகள் இருப்பதால் மிகப்பெரிய எண்ணெய் கப்பல்களை நிறுத்த ஏதுவாக உள்ளது. இங்கிருந்து செல்லும் கச்சா எண்ணெயை பெரும்பாலும் சீனா பெறுகிறது. எனவே கார்க் தீவின் எண்ணெய் கட்டமைப்பை தாக்கினால் சீனாவின் கோபத்திற்கு ஆளாகக் கூடும். இது ஈரான் போரை அடுத்த உலகப் போராகக் கூட மாற்றக் கூடிய அளவுக்கு பயங்கரமானது. எனவே இந்த கார்க் தீவின் எண்ணெய் கட்டமைப்புகளை அவ்வளவு எளிதில் தாக்க டிரம்ப் முடிவெடுக்க மாட்டார் எனவும் சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர்.
