வத்தலக்குண்டு, மார்ச் 14: தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி மக்களாட்சியை வலுப்படுத்த அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாகவும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு ஊர்வலம் செல்கின்றனர். இதன்படி வத்தலக்குண்டு வந்துள்ள 50 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், போலீசாருடன் இணைந்து நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். நிலக்கோட்டை டிஎஸ்பி இளஞ்செழியன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் கவுதம், எஸ்ஐக்கள் முனியாண்டி, ஜாபர் முன்னிலை வகித்தனர். வத்தலகுண்டு காளியம்மன் கோயில் அருகே துவங்கிய அணிவகுப்பு ஊர்வலம் மெயின்ரோடு, பஸ் நிலையம், பெரியகுளம் ரோடு வழியாக சென்று மஞ்சளாற்று பாலம் அருகே நிறைவடைந்தது. இதேபோல பழைய வத்தலக்குண்டிலும் அணிவகுப்பு நடந்தது.
