×

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம்- ஐசிஎம்ஆர் இடையே உயிரி மருத்துவ ஆராய்ச்சியை வலுப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்ப கவுன்சில் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: உயிரி மருத்துவ ஆராய்ச்சி உருவாக்கம், ஒருங்கிணைப்பு, ஊக்குவிப்பு ஆகிய பணிகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மேற்கொண்டு வருகிறது. அதேபோல, தமிழக அறிவியல், தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் பணியாற்றுகிறது. இந்த நிலையில், உயிரி மருத்துவ ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளைப் பாதுகாத்து வலுப்படுத்துவது தொடர்பாக இந்த இரு அமைப்புகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

டெல்லியில் உள்ள ஐசிஎம்ஆர் தலைமை அலுவலகத்தில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் ராஜீவ் பஹல், தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர், செயலர் வின்சென்ட் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர். அப்போது, நிதி ஆயோக் உறுப்பினர் பால், மருந்துகள் துறை செயலர் மனோஜ் ஜோஷி, காப்புரிமைகள், வடிவமைப்புகள், வர்த்தக முத்திரைகள் தலைமை பதிவாளர் உன்னத் பண்டிட் , தேசிய மருத்துவ ஆணையத் தலைவர் அபிஜாத் ஷேத், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் எம்.சீனிவாஸ், மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் மாநில திட்டப் பணிகள் பிரிவு தலைவர் நிஷா மெண்டிரத்தா ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஐசிஎம்ஆர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் இணைந்து உயிரி மருத்துவ ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள், அறிவுசார் சொத்துரிமை மூலம் பாதுகாப்பை மேம்படுத்த அறிவு பரிமாற்றங்களை செய்துகொள்ளும். பயிற்சித் திட்டங்கள், பயிற்சிப் பட்டறைகள், மாநாடுகளை நடத்தும். உயிரி மருத்துவக் கண்டுபிடிப்புகள் தொடர்பான அறிவுசார் சொத்துரிமைகளின் செயல்பாடுகளில் இரு அமைப்புகளும் பரஸ்பரம் உதவும். முதலீட்டாளர்களுடன் கண்டுபிடிப்பாளர்களை இணைப்பது, பயனுள்ள தொழில்நுட்ப பரிமாற்றம், உயிரி மருத்துவக் காப்புரிமைகளை வணிகமாக்கும் நோக்கத்துடன் ஒத்துழைப்பு அளிப்பது ஆகிய பணிகளையும் மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu State Council for Science and Technology ,ICMR ,Chennai ,Indian Council of Medical Research ,Tamil Nadu… ,
× RELATED ரூ.1843.85 கோடியில் 11 சாலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்