×

புதிதாக தொடங்கிய கட்சிப்பெயர் ‘அஇபுதமமுக’: சின்னம் – தென்னந்தோப்பு; ‘தனி மரம் தோப்பாகாது’ என பஞ்ச்; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கூட்டணி அமைத்து போட்டி; சசிகலா அறிவிப்பு

அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பே இல்லை என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததால், வேறு வழியின்றி, கடந்த மாதம் 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் அன்று பசும்பொன்னில் பொதுக்கூட்டம் நடத்தி புதிய கட்சியை தொடங்கினார். கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களில், நடுவில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்களுடன் கட்சியின் கொடியை அறிமுகம் செய்த சசிகலா, கட்சியின் பெயரை ஒரு வாரத்தில் அறிவிப்பதாக தெரிவித்தார். ஆனால், ஒரு வாரம் கடந்தும் அறிவிக்காமல் இருந்தார்.

இந்நிலையில், நேற்று சென்னை போயஸ் கார்டனில் பத்திரிகையாளர்களை சந்ததித்தார். அப்போது அவர் கூறியதாவது: புதிததாக தொடங்கிய கட்சிக்கு ‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. எனது கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் வரும் தேர்தலில் தமிழகம், புதுவையில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுகிறோம். மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் எங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். நாங்கள் என்றைக்கும் மக்களோடு இருப்போம் என்பது அவர்களுக்கும் தெரியும். மக்களுக்கு நியாய தர்மம் தெரியும்.

முதுகில் குத்த மாட்டார்கள். எனவே மக்கள் எங்களை ஆதரிப்பார்கள். எங்களுக்கு கிடைத்திருக்கும் சின்னத்தை பார்த்தீர்களா, இதில் 4 தென்னை மரங்கள் உள்ளன. இதை பார்க்கும் போது ஒற்றுமையை விரும்புவது போல் இருக்கிறது. நாங்கள் யாரையும் வேண்டாம் என ஒதுக்க மாட்டோம். அனைவருடனும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். பொதுவாக தனி மரம் தோப்பாகாது என்பார்கள். இது தமிழில் எனக்கு மிகவும் பிடித்த பழமொழியாகும். இந்த பழமொழியின்படி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். எங்கள் கொள்கையுடன் ஒத்து போகும் கட்சியுடனே கூட்டணி! எங்கள் கட்சி தொடக்கத்தால் எடப்பாடி பழனிசாமி சாதித்தாரா இல்லையா என்பது தேர்தல் முடிவுகளின் போது தெரிந்து கொள்ளுங்கள். மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. இவ்வாறு சசிகலா தெரிவித்திருந்தார்.

* ஊர்ந்து போய் காலை தொட்டதால் பதவி வாங்கியவர்: முதுகில் குத்துவதுதான் எடப்பாடியின் அரசியல் அடையாளம்; பிரசாரத்தை தொடங்கிய ஓபிஎஸ் கடும் தாக்கு
திமுகவில் சமீபத்தில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். அதன்படி, தென்காசி மாவட்டம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளில் நேற்று தேர்தல் சுற்றுப்பயணம் செய்தார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் குற்றாலத்தில் தேர்தல் பிரசார ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். கட்சியை அபகரித்துக்கொண்டு நாடகம் ஆடலாம். கடந்த முறை ஆட்சியில் இருந்தவர்கள் இன்று எதிர்க்கட்சியாக இருந்து தவறான பிரசாரத்தை மக்களிடம் பரப்பி வருகிறார்கள். ஊர்ந்து போய் பதவியைப்பெற்று, காலைத்தொட்டதால் பதவி தந்தவருக்கே நன்றி இல்லாமல் துரோகம் செய்தவர்.

நன்றி இல்லாத ஒருவர் அரசியலில் இருக்கிறார் என்றால் அது அவராகத்தான் (எடப்பாடி) இருக்கும். அவர் பொதுச்செயலாளராக வந்ததிலிருந்து நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல் சட்டமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் என தொடர்ந்து 10 தேர்தல்களில் தொடர் தோல்வி கிடைத்தது. அவரை நம்பி யாரும் வாக்களிக்க தயாராக இல்லை. இதனால் தான் அவர் தோல்வியை தழுவினார். அவர் சொல்வதெல்லாம் பொய். மக்கள் தெளிவாக உள்ளனர். தனக்கு பதவி வழங்கியவர்களை எதையோ பார்த்து குரைக்கிறது என்று சொன்னால் அவர் எவ்வளவு பெரிய நன்றி கெட்டவர்.

எந்த சூழ்நிலையிலும் நன்றி மறந்தவர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை. வருகின்ற தேர்தலிலும் அதுதான் நடக்கும். அனைவருக்கும் பொதுவாக இருந்த அதிமுகவை ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவருக்கான கட்சியாக மாற்றி விட்டார். எத்தனையோ இடங்களில் அதிமுகவிற்கு உறுதுணையாக நின்ற சமூகத்தை முற்றாக புறக்கணித்து விட்டார். அத்துடன் சிறுபான்மை மக்களுக்கும் எதிராக செயல்பட்டு சமூக நீதி தத்துவத்தை குழிதோண்டி புதைத்தவர் எடப்பாடி. தென் தமிழக மக்கள் உண்மையான விசுவாசியாக காலம் காலமாக இருந்து வந்தவர்களுக்கு எடப்பாடி செய்தது துரோகம். தன்னை அடையாளம் காட்டியவர்களின் முதுகில் குத்துவதுதான் அவரது அரசியல் அடையாளம்.

தென் மாவட்டத்தில் ஒரு சமுதாய மக்கள் எந்த நிலையிலும் வரக்கூடாது என்று நினைக்கின்ற நபர் அவர். தமிழ்நாடு அண்ணா பெரியார் போன்ற தலைவர்களால் பண்படுத்தப்பட்ட மண். பெரியாரையும் அண்ணாவையும் அவமதிக்கும் கூட்டங்களில் அவர் கலந்து கொள்கிறார். தமிழ்நாட்டில் மத பிரிவினை வாதம் வன்முறையை தூண்டுவதற்கு துணை நிற்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதாவின் ஆன்மா அவரை மன்னிக்காது. தமிழ்நாட்டின் சமநீதியை என்ன விலை கொடுத்தாவது காப்பாற்றி ஆக வேண்டும். ஆகவே தான் சமூக நீதியை காக்கும் தாய்க்கழகமான திமுகவில் நான் இணைந்து இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : AIADMK ,Coconut Grove ,Tamil Nadu ,Puducherry ,Sasikala ,General Secretary ,Edappadi Palaniswami ,Jayalalithaa ,Pasumpon ,
× RELATED மாம்பழச் சின்னம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் ராமதாஸ் மேல்முறையீடு