சொன்னாரு: திமுக தனது 2021ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், தமிழகம் முழுவதும் உரிய காலம் கடந்தும் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்படாத கிராமக் கோயில்கள் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் குடமுழுக்கு நடத்தப்படும். இதற்காக திமுக அரசு பொறுப்பேற்றவுடன் நிதி ஒதுக்கீடு செய்யும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
செஞ்சாரு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் காலப் பெட்டகங்களான கோயில்களைப் புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்குகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், 4,417 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்கு நடத்துதல், குளங்கள், தேர்கள் மற்றும் நந்தவனங்களைச் சீரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல், திருக்கோயில்களின் வருவாய் இனங்களை முறைப்படுத்தி வசூலித்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி குடமுழுக்கு நடைபெறாத திருக்கோயில்களை கண்டறிந்து திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தும் பணிகளை முன் எப்போதும் இல்லாத அளவில் இந்து சமய அறநிலையத்துறை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 400 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்கும், 300 ஆண்டுகளுக்கு பிறகு, காஞ்சிபுரம் மாவட்டம், சாத்தனஞ்சேரி, கரியமாணிக்க வரதராஜ பெருமாள் கோயிலுக்கும், 150 ஆண்டுகளுக்கு பிறகு இராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம், கங்காதீஸ்வரர் கோயிலுக்கும், 123 ஆண்டுகளுக்கு பிறகு திருநெல்வேலி மாவட்டம், அரிகேசவநல்லூர், பெரியநாயகி சமேத அரியநாத சுவாமி கோயிலும், 110 ஆண்டுகளுக்கு பிறகு வேலூர் மாவட்டம், வெட்டுவானம், திரௌபதியம்மன் கோயிலுக்கும், 100 ஆண்டுகளுக்கு பிறகு 22 கோயில்களுக்கும், 80 ஆண்டுகளுக்கு பிறகு 10 கோயில்களுக்கும், 70 ஆண்டுகளுக்கு பிறகு 14 கோயில்களுக்கும், 60 ஆண்டுகளுக்கு பிறகு 21 கோயில்களுக்கும், 50 ஆண்டுகளுக்கு பிறகு 48 கோயில்களுக்கும், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன.
1,000 ஆண்டுகள் தொன்மையான கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.425 கோடியை அரசு மானியமாக வழங்கியுள்ளார். அரசு மானியம், பொதுநல நிதி, கோயில் நிதி மற்றும் உபயதாரர்கள் நிதி என மொத்தம் ரூ.560 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இதுவரை 77 கோயில்களில் குடமுழுக்கு நிறைவு பெற்றுள்ளன. மேலும், மொத்தமாகத் தமிழகம் முழுவதும் உள்ள 4,417 கோயில்களுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
* தலைவர்கள் இன்று…
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை
எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்) சேலம்
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ் மாநில தலைவர்) சென்னை
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்) தூத்துக்குடி, நெல்லை
நயினார் நாகேந்திரன் (பாஜ தலைவர்) நெல்லை
பெ.சண்முகம் (சி.பி.எம்.மாநில செயலாளர்) சென்னை
மு.வீரபாண்டியன் (சி.பி.ஐ.மாநில செயலாளர்) சென்னை
திருமாவளவன் (வி.சி.க தலைவர்) சென்னை
பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்) சென்னை
அன்புமணி (பாமக தலைவர்) சென்னை
ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்) டெல்லி
சீமான்(நாதக ஒருங்கிணைப்பாளர்) சென்னை
டி.டி.வி.தினகரன்(அமமுக பொதுச்செயலாளர்) சென்னை
விஜய் (தவெக தலைவர்) பனையூர்
