சென்னை: இந்து மக்கள் கட்சி நாளை நடத்தவுள்ள மாநில அளவிலான மாநாட்டிற்கு அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், உள் அரங்கத்தில் மட்டுமே நடத்த வேண்டும் என்றும், பேரணி, ஊர்வலம் செல்ல அனுமதியில்லை என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழ், தமிழர், தமிழகம் உரிமை மீட்பு மாநாடு 15ம் தேதி (நாளை) சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கோ மாதா பூஜை, சன்னியாசிகள், மடாதிபதிகள் நடத்தும் ஆன்மிக சொற்பொழிவு, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பட்டிமன்றம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
இந்த மாநாட்டையொட்டி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் சென்னை எழும்பூரில் ஊர்வலம் செல்ல காவல்துறையின் அனுமதி கோரப்பட்டது. ஆனால், பேரணி, ஊர்வலம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, மாநாட்டுக்கு அனுமதி கோரி இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி அருண்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், மாநாட்டு நிகழ்ச்சிகளை உள் அரங்கில் வைத்து மட்டுமே நடத்த வேண்டும், ஊர்வலமாகவோ, பேரணியாகவோ செல்ல அனுமதியில்லை என்று உத்தரவிட்டார்.
