கோபால்பட்டி, மார்ச் 10: நத்தம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் படுகாயமடைந்தனர்.
திண்டுக்கல் முருகபவனத்தை சேர்ந்தவர் தீபிகா (29). ஆட்டோ டிரைவர். இவர் ஆட்டோவில், உறவினர்களுடன் நத்தம் மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்று விட்டு நேற்று காலை, மீண்டும் கோபால்பட்டியை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது நத்தம் சாலையில் கணவாய்பட்டி பிரிவு என்ற இடத்தில் ஆட்டோ நிலை தடுமாறி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தீபிகா, வடூகபட்டியை சேர்ந்த மகாலட்சுமி (38), அவரது கணவர் சந்திரன் (42), மகள் ஆர்த்தி (16), முருகபவனத்தை சேர்ந்த சுஜிதா (21), கேகே.நகரைச் சேர்ந்த கலைவாணி (37), பத்மஜோதி (37), யஷ்விதா (5),கோகிலா(35), அழகர்(65), ஹர்ஷிதா (2) ஆகிய 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
