×

100 வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்குவதற்கான நிதியொப்பளிப்பு அரசாணையை வழங்கினார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

சென்னை: 2024-2025ஆம் ஆண்டிற்கு தெரிவு செய்யப்பட்ட 100 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள்தோறும் உதவித்தொகை வழங்குவதற்கான நிதியொப்பளிப்பு அரசாணையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 10.03.2026 இன்று செவ்வாய்க்கிழமை, சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக் கழக அரங்கில் வழங்கினார்.

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதுகாறும் 1534 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 2025-26ஆம் நிதியாண்டு முதல் பயனாளிகளின் எண்ணிக்கை 100 லிருந்து 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது இத்திட்டதிற்கென ஆண்டிற்கு ரூ.6,98,08,000/- தொடர் செலவினமாக அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்தோறும் உதவித்தொகை ரூ.7500/-ம், மருத்துவப்படி ரூ.500/-ம் என மொத்தம் எட்டாயிரம் ரூபாய் வழங்கப்பெறுகிறது. தமிழுக்காகத் தம் வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு இந்த உதவித்தொகை அவர்கள் வாழுங்காலமெல்லாம் தமிழ்த் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. தகைமைமேல் தகைமையாக, அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது. தமிழ் காத்த தகைமைக்காக உதவித்தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னர், அவரின் வாழ்விணையர் / திருமணமாகாத மகள் / கைம்பெண் மகளுக்கு, அவர்தம் வாழ்நாள் முழுவதும் ரூ.2500/- மற்றும் மருத்துவப் படி ரூ.500/- என அத்திருத்தொண்டு தொடர்கிறது.

அதன்படி 2024-2025ம் நிதியாண்டிற்கு சென்னை மாவட்டத்தில் 9 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 5 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 பேருக்கும், வேலூர் மாவட்டத்தில் 3 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 2 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவருக்கும், அரியலூர் மாவட்டத்தில் ஒருவருக்கும், தருமபுரி மாவட்டத்தில் 3 பேருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 2 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் ஒருவருக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 2 பேருக்கும், நீலகிரி மாவட்டத்தில் 6 பேருக்கும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 4 பேருக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 பேருக்கும், சிவகங்கை மாவட்டத்தில் 2 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 பேருக்கும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3 பேருக்கும், இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருவருக்கும், மதுரை மாவட்டத்தில் 3 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருவருக்கும், தேனி மாவட்டத்தில் 4 பேருக்கும், விருதுநகர் மாவட்டத்தில் 2 பேருக்கும், திருநெல்வேலி மாவட்டத்தில் 2 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருவருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 பேருக்கும், இராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் ஒருவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 பேருக்கும் என மொத்தம் 34 மாவட்டங்களிலும் 100 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி ஒப்பளிப்பு அரசாணையினை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்களால் 10.03.2026 இன்று செவ்வாய்க்கிழமை, சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக் கழக அரங்கில் வழங்கி விழாப் பேருரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன். இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Mu Mu Kyi ,Fr. ,SAMINATHAN ,Chennai ,Tamil Development and Media ,M.P. ,Fr. SAMINATHAN ,RAJA ANNAMALAIPURA, CHENNAI ,
× RELATED தமிழ்நாட்டு சொந்தங்களே மனமார்ந்த...