போச்சம்பள்ளி : போச்சம்பள்ளியில், பூச்சி தாக்குதல் மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து தப்பிக்க, மாங்காய்களுக்கு, விவசாயி சிறப்பு உறை கட்டி விவசாயி பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டார். இதை அருகில் உள்ள விவசாயிகள் பார்த்துசெல்கின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 33 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா விவசாயம் நடைபெற்று வருகிறது.
கடந்த காலங்களில் சுமார் 41 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நடந்த மா விவசாயம் கால நிலை மாற்றம், பூச்சி தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால், அரசு எவ்வித முன்னேற்பாடு மேற்கொள்ளததால் விவசாயிகள் மாற்று விவசாயத்திற்கு மாறினர்.
இதன் காரணமாக 41 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவாக குறைந்துள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு பருவத்திற்கு முன்கூட்டியே மா மரங்களில் பூக்கள் பூக்கத் துவங்கி உள்ளது.
மாம்பூவில் பேன் தாக்கியதால் பூக்கள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதனையும் காக்க அரசு எவ்வித நடவடிக்கை எடுக்காததால், இந்தாண்டு மா உற்பத்தி கணிசமாக குறையும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மானாவரி பயிராக வளர்த்து வந்த மாம்பூக்களில் மருந்து தெளிப்பு தொடர்ந்து, காய் காய்க்கும் வரை சுமார் 5 அல்லது 6 முறை மருந்துகள் தெளிக்க வேண்டி உள்ளது. இதன் காரணமாக ஏக்கருக்கு சில ஆயிரங்கள் வரை மருந்திற்கு செலவு பிடிப்பதாக மா விவசாயிகள் தெரிவித்தனர். இருந்தபோதும் மா உற்பத்தி பெருமளவு பாதிப்படைவதுடன், பூச்சி தாக்குதல் அதிகம் காணப்படுவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், போச்சம்பள்ளி வட்டம், என். தட்டக்கல் கிராமத்தை சேர்ந்த சிவகுரு என்பவர், தனது 2 ஏக்கர் நிலத்தில் உள்ள மா மரங்களுக்கு ஆந்திரா மாநிலம் சித்தூரில் இருந்து வரவழைக்கப்பட்ட சறிப்பு உறை மா பிஞ்சுகளில் பொருத்துவதன் மூலம் தரமான மாங்காய்களை உற்பத்தி செய்ய முடியும். இதன் அடிப்படையில் மாவட்டத்திலேயே முதல் முறையாக அவரது விவசாய நிலத்தில் உள்ள மாங்காய்களுக்கு சிறப்பு உறையை பொருத்தி வருகிறார்.
இது குறித்து மா விவசாயி சிவகுரு கூறியதாவது: மா பிஞ்சுகளுக்கு பொருத்தப்படும் சிறப்பு உறை குறித்து, ஆந்திரா மாநிலம் சித்தூரில் உள்ள மா விவசாயி மூலம் மா பிஞ்சுகளுக்கு பொருத்தக்கூடிய சிறப்பு உறைகளை பெற்று தற்போது, இரண்டு ஏக்கரில் உள்ள மா தோட்டத்தில், தரமான மாங்காய்களை தேர்ந்து எடுத்து அந்த காய்கக்கு சிறப்பு உறை பொருத்தி வருகிறது.
மேலும் மாம் பூக்களுக்கு இந்த மா உறைகளை பொருத்த விட்டால், அதன் பிறகு எவ்வித மருந்து தெளிப்பு இருக்கத்தேவையில்லை. இந்த மா உறை பொருத்துவதன் மூலம் எவ்வித நோய் தாக்குதல் இல்லை என்றார்.
ஒரு உறை ரூ.2 எனவும் அதனை கூலி ஆட்கள் கொண்டு பொருத்துவதற்கு ஒரு ரூபாய் செலவு பிடிப்பதாகவும் தெரிவித்ததோடு, ஆந்திரா மாநிலத்தில் இந்த மா உறைகளை அந்த அரசு விவசாயிகளுக்கு மானிய விலையில் கொடுத்து வருகின்றனர். அதே போல் தமிழக அரசும் மா விவசாயிகளை காப்பாற்ற இந்த மா உறையை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தற்போது மாவட்டத்தில் உள்ள மா விவசாயிகள் நேரில் பார்வையிட்டு வருகிறார்கள். மாவட்டத்திலேயே முதன் முறையாக மாங்காய்களுக்கு சிறப்பு உறை பொருத்தி வருவதை அறிந்த அக்கம் பக்கம் உள்ள விவசாயிகள், மற்ற பகுதிகளில் உள்ள மா விவசாயிகள் இந்த மா தோட்டத்தை நேரில் பார்வையிட்டு வருகிறார்கள்.

