தேனி, மார்ச் 10: தேனி அருகே பூதிப்புரத்தை சேர்ந்த பெருமாள் மகன் உதயகுமார்(55). இவர் 108 ஆம்புலன்சில் பைலட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது தாயார் நாகரத்தினம்(72), தினமும் பூதிபுரத்தில் வாழையாத்துப்பட்டி பிரிவில் உள்ள வீருபொம்மம்மாள் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். இதன்படி, கடந்த 6ம் தேதி அவர் கோயிலுக்கு சென்று திரும்பிய போது வாயிலில் தீபம் எரிந்து கொண்டிருந்த தீபம் அவரது சேலையில் பற்றியது.
இதில் தீ மளமளவென மூதாட்டி உடலில் பற்றி எரிந்ததால், அருகில் இருந்தவர்கள் நெருப்பை அணைத்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உதயகுமார் அளித்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
