×

காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை அறிவிப்பு

 

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை: சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது. டீக்கடைகள், ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையும் ரூ.114.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள டீ, காபி போன்ற பானங்களின் விலை உயர்வதற்கான வழி ஏற்பட்டிருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் அதிகரித்து பொருட்களின் விலை உயர்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இது நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களின் வாங்கும் திறனை கடுமையாக பாதிக்கும். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவிகிதத்திற்கும் மேலாக இறக்குமதியையே நம்பியிருக்கிறது. போர் காரணமாக ஈரானில் இருந்தும் பிற வளைகுடா நாடுகளிலிருந்தும் எண்ணெய் விநியோகத்தில் தடை ஏற்பட்டிருப்பது இந்தியாவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

ஒன்றிய பாஜ அரசின் தவறான வெளிநாட்டு கொள்கையின் காரணமாக, குடும்பப் பெண்களின் பயன்பாட்டில் உள்ள காஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டிருப்பதை கண்டித்து, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி எம். ஹசீனா சையத் ஒருங்கிணைப்பில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மகளிர் காங்கிரஸ் சார்பில், இன்று (10ம் தேதி) கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி ஒன்றிய அரசுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Congress ,Selvaperundhagai ,Chennai ,Tamil Nadu Congress ,
× RELATED இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு கடத்தல்: 6 கிலோ தங்கம் பறிமுதல்