×

ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்த சம்பவம்; வாஜ்பாய் காலத்தில் நடந்தது போன்ற விவாதம் இப்போது நடக்குமா? காங்கிரஸ் மூத்த எம்பி கேள்வி

 

புதுடெல்லி: மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவி வரும் போர் சூழல் குறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்று விளக்கம் அளிக்கிறார். கடந்த 2003ம் ஆண்டில், ஈராக் நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது, அது குறித்து நாடாளுமன்றத்தில் மிகத்தீவிரமான விவாதம் நடத்தப்பட்டது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய், ஜனநாயக மரபுகளைப் பின்பற்றி எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று அந்தப் படையெடுப்பைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றவும் வழிவகை செய்தார் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், தற்போது மீண்டும் கூடும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பாதியில், மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலை குறித்து இன்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் லோக்சபாவில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.

ேநற்று மாலை வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட அலுவல் பட்டியலில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், மேற்கு ஆசிய நிலைமை குறித்து அறிக்கை அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் மட்டுமே நிகழ்ச்சி நிரலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, அமைச்சரின் இந்த அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், ‘அமைச்சர்கள் அளிக்கும் இதுபோன்ற அறிக்கைகளில் ஏற்கனவே தெரிந்த தகவல்களைத் தவிரப் புதிதாக ஏதும் இருப்பதில்லை. மிக முக்கியமாக, இதுகுறித்து எம்.பி.க்கள் விளக்கம் கேட்கவோ அல்லது கேள்விகளை எழுப்பவோ வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. எதிர்க்கட்சிகள் விரும்புவது இதுகுறித்த முழுமையான விவாதம் மட்டுமே’ என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மறுபுறம், மேற்கு ஆசியாவில் நிலவும் அசாதாரண சூழலை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. குறிப்பாக, அந்தப் பிராந்தியத்தில் சிக்கியுள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. வான்வழிப் போக்குவரத்து தற்காலிகமாகத் திறக்கப்பட்டதை அடுத்து, இதுவரை 52,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் இலக்குகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களும், அதற்குப் பதிலடியாக அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களும் அங்குள்ள பாதுகாப்பற்ற சூழலைத் தொடர்ந்து நீட்டிக்கச் செய்துள்ளது.

 

Tags : US ,Iraq ,Wajpayee ,New Delhi ,Union ,Foreign Minister ,West Asian region ,United States ,Parliament ,
× RELATED விமானத்தின் கழிவறையில் பீடி பிடித்த நபர் மீது வழக்குப்பதிவு