டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரை தாண்டியது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் கடந்த 28 ம் தேதி ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, யுஏஇ, சவுதி, கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளில் ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன. ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளும் மாறி மாறி ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையே பிப்ரவரி 28ம் தேதி தொடங்கிய போர் 10வது நாளாக நீடிக்கிறது. ஈரானின் 44 போர்க்கப்பல்களை அழித்துள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,300ஆக உயர்ந்துள்ளது. ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரை தாண்டியது.
வெள்ளிக்கிழமை கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 92.69 டாலராக இருந்த நிலையில் இன்று 100 டாலரை தாண்டியது. 2022ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
