×

பாஜவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: தென்காசி நகராட்சி கூட்டத்தில் பெண் கவுன்சிலர் கண்ணீர்

தென்காசி நகராட்சி அவசர கூட்டம் தலைவர் சாதிர் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பாஜ கவுன்சிலர் சுனிதா கண்ணீர் மல்க பேசுகையில், ‘பாஜவை சேர்ந்த ஒருவர் என் பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளார். அதனால் தான் இன்று சபையில் வேதனையுடன் பேசுகிறேன். அவர்கள் பேசிய வார்த்தையால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். என் கட்சியைச் சேர்ந்தவர்களே என்னை அவதூறாக பேசும் போது, என்னைத் தவறாக பேசிய உறுப்பினருக்கு எதிராக பெண் உறுப்பினர்கள் என்னுடன் நிற்க வேண்டும். மனதால் மிகவும் வேதனைப்படுகிறேன்.

அதிக நாட்கள் பொறுமையாக இருந்திருக்கிறேன். பாஜவினர் ஒருவரும் எனக்கு ஆறுதலாக இல்லை. பாஜவினர் இவ்வளவு அவதூறாக பேசும்போது நான் எவ்வளவு பொறுமையாக இருக்க முடியும்’ என்றார். நகர்மன்ற தலைவர் சாதிர் பதிலளிக்கையில், ‘உறுப்பினர்களை தனிப்பட்ட முறையில் அவதூறாக பேசுகின்றவர்கள் மீது பாகுபாடு இன்றி எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண்கள் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது’ என்றார்.

பின்னர் பாஜ கவுன்சிலர் சுனிதா அளித்த பேட்டியில், ‘நான் பாஜவை சேர்ந்த உறுப்பினர்‌. பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்று நம்பி தான் இந்த கட்சியில் சேர்ந்தேன். ஆனால் எனது வார்டில்‌ நகராட்சிப் பணிகளையும் கட்சி பணிகளையும் செய்ய விடாமல் என்னை டார்ச்சர் செய்துள்ளனர். இதுகுறித்து நான் கட்சியின் தலைவர் மற்றும் மாவட்ட தலைவரிடம் பலமுறை எடுத்துக் கூறியும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

என்னை பழிவாங்குவதற்காக என் கணவர் மீது புகார் கொடுத்து நான்கு நாட்கள் சிறையில் தள்ளி விட்டனர். இதுகுறித்து மாவட்ட தலைவரிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. நான் யாரிடம் சென்று சொல்வது?. நேற்று சமூக வலைதளங்களில் என்னை அவதூறாக பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட தலைவருக்கு தொடர்பு கொண்டபோது அவர் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை. இதனால் தான் நான் நகர்மன்ற கூட்டத்தில் பேசினேன். பாஜவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை இப்போது புரிந்து கொண்டேன். தமிழக பாஜ தலைமை பெண்களை மதிப்பவர்களுக்கு பொறுப்புகளை வழங்க வேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

Tags : BJP ,Tenkasi ,Sadir ,Sunitha ,
× RELATED மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டுள்ள...