- காங்கிரஸ்
- முகுல் வாஸ்னிக்
- சென்னை
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
- திமுக
- காங்கிரஸ் கட்சி
- ராஜ்ய சபா
- காங்கிரஸ்…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் உச்சகட்ட தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரசில் ஏராளமானோர் எம்எல்ஏ சீட் கேட்டு முட்டி மோதி வருவது தமிழக காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் முதுநிலை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட முகுல் வாஸ்னிக், அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு சென்னை வந்தார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர், மூத்த தலைவர்கள், பிரிவு தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், மாநில பொறுப்பாளர்கள் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
குறிப்பாக, திமுகவுடன் கூட்டணி பங்கீடு சுமுகமாக முடிந்த நிலையில் அடுத்ததாக காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் பரிசீலனை உள்ளிட்டவற்றை குறித்து முகுல் வாஸ்னிக் கருத்து கேட்கிறார். இதனால் தமிழகம் முழுவதும் இருந்து வாய்ப்பு கேட்டு வரும் காங்கிரசார் சத்தியமூர்த்தி பவனில் முட்டி மோதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தமிழக காங்கிரசில் நிலவும் உள்கட்சி பூசல்களை சரி செய்து அவர்களை தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் கட்சி டெல்லி காங்கிரஸ் தலைமை அவரை அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
