அதிமுக பாஜ கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொகுதி பங்கீடு இன்னும் முடிவாகாமல் உள்ளது. பாஜ தலைமை நிர்வாகிகள் சென்னைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தொகுதிகள் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், திருப்பூர் தெற்கு தொகுதியை பாஜ குறி வைத்துள்ளது. அதிமுக சார்பில் திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் மனைவி கவிதா குணசேகரன், அட்லஸ் லோகநாதன் மற்றும் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால், யாருக்கு சீட் வழங்க வேண்டும் என அதிமுக தலைமை குழப்பத்தில் உள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிமுகவில் உள்ள இந்த பிரச்னையை சாதகமாக்கி தெற்கு தொகுதியில் போட்டியிட பாஜ ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக அந்த கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் ஏற்கனவே ஏ.பி. முருகானந்தம் திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டுள்ளார். மேலும் தெற்கு பகுதியில் கணிசமான வாக்குகளை அவர் பெற்றுள்ளதால், அவரது ஆதரவாளர்கள் தெற்கு தொகுதியில் சீட் பெற்றே தீருவோம் என அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
