×

கமிஷனோடு சிலிண்டருக்கு ரூ.1000 தரணும் இல்லத்தரசிகள் கொந்தளித்து குமுறல்

 

சென்னை: ஒன்றிய அரசு சமையல் காஸ் சிலிண்டர் விலையை ரூ.60 உயர்த்தி உள்ளது. இதனால் கமிஷனுடன் சிலிண்டருக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவழிக்க வேண்டியுள்ளதால் பொதுமக்கள் கொந்தளித்துபோய் உள்ளனர். சிலிண்டர் விலையை உயர்த்தி வயிற்றில் அடித்துவிட்டதாக இல்லத்தரசிகள் குமுறுகின்றனர்.

லட்சுமி பிரபா (எம்கேபி நகர்)
ஒரு சிலிண்டருக்கு 60 ரூபாய் விலை ஏற்றப்பட்டுள்ளது. இது நடுத்தர, அடித்தட்டு மக்களை பாதிக்கக்கூடிய விஷயம். இதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் பெரிய சுமையை சுமத்தியுள்ளனர். இதனால் உணவகங்களில் சாப்பாடு விலை உயர வாய்ப்புள்ளது. மத்திய அரசு ஒவ்வொரு விஷயத்திலும் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் வயிற்றில் அடிப்பது போல முடிவுகளை எடுக்கிறது.

எ.லில்லி (திருவொற்றியூர்)
எங்களுக்கு கிடைக்கின்ற வருவாயை வைத்து குடும்பத்தை நடத்துவது என்பது சிரமமாக உள்ளது. தற்போது கேஸ் விலை உயர்த்தப்பட்டது எங்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன்காரணமாக உணவு பொருட்கள் மட்டுமின்றி அத்தனை அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது.

மலர் (கொடுங்கையூர்)
தற்போது சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது போன்று தெரிகிறது. இவற்றை மத்திய அரசால் கண்டிப்பாக கட்டுப்படுத்தியிருக்க முடியும். பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் போன்ற அடிப்படை விஷயங்களில் மத்திய அரசு தொடர்ந்து பொதுமக்களை பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கின்ற இந்த சமையல் சிலிண்டர் விலை ஏற்றத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

லதா (திருவேற்காடு)
ஒன்றிய அரசு திடீரென இரவோடு இரவாக கேஸ் சிலிண்டர் விலையை 60 ரூபாய் உயர்த்தியுள்ளது. இது சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் சுமையை ஏற்படுத்தும். விலைவாசிஅதிகரித்து கொண்டு செல்லும் நிலையில் சிலிண்டர் விலையை உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

எஸ்.தேவி (திருவொற்றியூர்)
தற்போது ஒன்றிய அரசு கேஸ் விலையை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு எங்களைப்போன்ற சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். இதன்மூலம் அனைத்து உணவு மற்றும் மளிகை பொருட்களில் விலை உயரும். இந்த விலை உயர்வை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பபெற வேண்டும்.

நீலாவதி (திருவேற்காடு)
திடீரென சிலிண்டர் விலையை ₹60 உயர்த்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அன்றாடம் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்துபவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கும். போரை காரணம் காட்டி விலைஉயர்த்தியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து விலை உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது ஒன்றிய அரசின் பொறுப்பு.

Tags : Chennai ,EU government ,Lakshmi ,
× RELATED திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள்,...