×

பந்தலூர் அருகே படச்சேரி கிராமத்தில் சாலை சீரமைப்பு பணி துவங்கியது

*கோரிக்கை நிறைவேறியதால் மக்கள் மகிழ்ச்சி

பந்தலூர் : நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட படச்சேரி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கு முன் தார்சாலை போடப்பட்டது. ஆனால், அந்த தார்சாலை பழுதடைந்து காணப்பட்டது. குண்டும் குழியுமாக இருந்த இந்த சாலையில் செல்ல முடியாமல் மக்கள் அவதியடைந்து வந்தனர்.

இந்த பகுதி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் பழுதடைந்து கிடந்த இந்த சாலையை சீரமைக்கவேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.தமிழ்நாடு முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் படச்சேரி கிராமத்தில் 1.2 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலையை ரூ.103 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலங்கள், தரைப்பாலங்கள், தடுப்புச்சுவர் அமைக்கும் பணியுடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்த பணி நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி, ஒன்றிய திமுக செயலாளர் சிவானந்தராஜா ஆகியோர் பங்கேற்று பணியை துவக்கி வைத்தனர். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கோமதி, அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், துணை செயலாளர் பாக்கியநாதன், மாவட்ட பிரதிநிதி கணபதி மற்றும் மாவட்ட, ஒன்றிய, இளைஞரணி, வார்டு செயலாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். தங்கள் கோரிக்கை நிறைவேறி சாலை அமைக்கும் பணி துவங்கியதால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

Tags : Patacheri village ,Pandalur ,Patacheri ,Cherangodu panchayat ,Nilgiris district ,
× RELATED பேராசிரியரின் நினைவு நாளில் திராவிட...