×

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கத்தில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக 3 ஆளுநர்களின் இடமாற்றம், ராஜினாமா, கூடுதல் பொறுப்பு ஏன்?: பாஜக ஆளாத மாநிலங்களில் நிர்வாக பிடி இறுகுகிறதா?

புதுடெல்லி: ஒன்றிய அரசின் பரிந்துரையை ஏற்று பல்வேறு மாநிலங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு முதல் தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பணியாற்றி வந்தார். இவரது பதவிக்காலத்தில் தமிழக அரசுடன் பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. குறிப்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் மற்றும் கொள்கை ரீதியான முரண்பாடுகள் காரணமாக ஆளுநருக்கும், திமுக தலைமையிலான அரசுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் வெடித்தன. இந்தச் சூழலில், மேற்கு வங்க ஆளுநராக இருந்த சி.வி.ஆனந்த போஸ், தான் நீண்ட காலம் பணியாற்றிவிட்டதாகக் கூறி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து மாநில ஆளுநர் பொறுப்புகளில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்ய ஒன்றிய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, நேற்றைய தேதியிட்ட குடியரசுத் தலைவரின் உத்தரவுப்படி மேற்கு வங்க மாநில புதிய ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிக்கும் வகையில், கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி துணை நிலை ஆளுநராக இருந்த வினய் குமார் சக்சேனா, லடாக் பகுதிக்கு மாற்றப்பட்டார். அமெரிக்காவிற்கான இந்திய தூதராக இருந்த தரஞ்சித் சிங் சாந்து டெல்லியின் புதிய துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பீகார் ஆளுநராக லெப்டினன்ட் ஜெனரல் சையத் அடா ஹஸ்னைன், மகாராஷ்டிரா ஆளுநராக ஜிஷ்ணு தேவ் வர்மா, தெலங்கானா ஆளுநராக சிவபிரதாப் சுக்லா, அரியானா ஆளுநராக கவிந்தர் குப்தா மற்றும் நாகாலாந்து ஆளுநராக நந்த் கிஷோர் யாதவ் ஆகிய 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அதிரடி மாற்றங்கள் குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், ‘சி.வி.ஆனந்த போஸின் திடீர் ராஜினாமாவும், ஆர்.என்.ரவியின் நியமனமும் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசை ஒன்றிய உள்துறை அமைச்சகம் கலந்தாலோசிக்கவில்லை. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மற்றும் மரபுகளை மீறிய செயலாகும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இத்தகைய திட்டமிடல் அரசியல் அழுத்தத்தின் காரணமாகவே செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் ஆர்.என்.ரவியின் இடமாற்றம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை வெளியாக சில நாட்களே உள்ள நிலையில், பேரவை தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு ஆளுநர் இடமாற்றம், மேற்குவங்க ஆளுநர் விலகல், கேரள ஆளுநர் தமிழ்நாட்டிற்கு கூடுதல் பொறுப்பு என்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை ஒன்றிய அரசு எடுத்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், பாஜக ஆளாத மாநிலங்களில் நிர்வாக ரீதியான பிடியை வலுப்படுத்தவே இந்த அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Tamil Nadu ,Kerala ,West Bengal ,BJP ,New Delhi ,President ,Draupadi Murmu ,Union government ,R.N. Ravi ,Governor of Tamil Nadu ,
× RELATED ஆந்திராவில் ஒரு குழந்தைக்கு மேல்...