×

மாநிலங்களவை தேர்தல் திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்: காங்கிரஸ்-கிறிஸ்டோபர் திலக்; தேமுதிக-சுதீஷ்; பாமக-அன்புமணி ஆகியோரும் வேட்புமனு: அனைவரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு திருச்சி சிவா (திமுக), கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (திமுக), கிறிஸ்டோபர் திலக் (காங்கிரஸ்), எல்.கே.சுதீஷ் (தேமுதிக), தம்பிதுரை (அதிமுக), அன்புமணி (பாமக) ஆகிய 6 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 26ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 5ம் தேதி (நேற்று) கடைசி நாளாகும். வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 9ம் தேதி கடைசி நாளாகும். மார்ச் 16ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தில் தம்பிதுரை (அதிமுக), ஜி.கே.வாசன் (தமாகா) மற்றும் திமுகவை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி.செல்வராசு ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் சென்னை, தலைமை செயலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சட்டப்பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளர் சாந்தியை தேர்தல் நடத்தும் அலுவலராகவும், செயலாளர் தேன்மொழியை உதவி தேர்தல் நடத்தும் அலுவலராகவும் இந்திய தேர்தல் ஆணையம் நியமித்து உள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்களின் அடிப்படையில் திமுக 4 எம்.பிக்களையும், அதிமுக 2 எம்.பிக்களையும் தேர்வு செய்ய முடியும்.

தமிழகத்தில் ஒரு சில வாரங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால், மாநிலங்களவை தேர்தலில் திமுக மற்றும் அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி நேற்று முன்தினம் இரவு வரை நீடித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு உடன்பாடு ஏற்பட்டு, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி திமுக சார்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார்.

மீதமுள்ள இரண்டு இடங்களில் எல்.கே.சுதீஷ் (தேமுதிக), காங்கிரஸ் சார்பில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதேபோன்று அதிமுக கூட்டணியில் தம்பிதுரை மீண்டும் போட்டியிடுவார் என்றும், ஒரு இடம் கூட்டணி கட்சியான பாமக (அ) அணிக்கு வழங்கப்படும் என்றும், அந்த இடத்தில் பாமக தலைவர் அன்புமணி போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ய நேற்று (5ம் தேதி) கடைசி நாள் என்பதால், நேற்று காலை 11 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மு.தம்பிதுரை சென்னை, தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியும் சட்டப்பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளருமான சாந்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அதிமுக முன்னணி தலைவர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன் உடன் இருந்தனர்.

இதை தொடர்ந்து பாமக (அ) சார்பில் அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது கூட்டணி கட்சியான அதிமுக முன்னணி தலைவர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், பி.தங்கமணி, பாமக எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ஆகியோர் உடனிருந்தனர். இதை தொடர்ந்து நேற்று மதியம் 12.45 மணிக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அப்போது எம்பிக்கள் டி.ஆர்.பாலு, துரை வைகோ, மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர். இவர்களை தொடர்ந்து திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு அறிவிக்கப்பட்ட ஒரு இடத்தில் கிறிஸ்டோபர் திலக் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, மமக தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் உடனிருந்தனர்.

அடுத்து திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு வழங்கப்பட்ட ஒரு இடத்தில், அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது திமுக எம்பி ஆ.ராசா, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.ராஜேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர். இன்று (6ம் தேதி) வேட்புமனு பரிசீலனை நடைபெறும். மாநிலங்களவை எம்பி பதவிக்கு போட்டியிட 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும்.

அதனால் அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் மனுக்கள் இன்று பரிசீலனையின்போது ஏற்றுக்கொள்ளப்படும். சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த சேலம், மேட்டூரை சேர்ந்த பத்மராஜன், திருச்சியை சேர்ந்த கே.பி.எம்.ராஜா, சென்னை, அம்பத்தூரை சேர்ந்த டி.கே.மேஷாக் கிருபாகரன், அக்னீஸ்வரன், கந்தசாமி ஆகிய 5 பேருக்கு எம்எல்ஏக்கள் யாரும் முன்மொழியவில்லை. அதனால் அவர்களது மனுக்கள் தள்ளுபடியாகி விடும்.

சனி, ஞாயிறு விடுமுறையாகும். 9ம் தேதி (திங்கள்) மாலை 3 மணிக்குள் வேட்புமனு மக்கள் வாபஸ் வாங்கலாம். இதையடுத்து அரசியல் கட்சிகள் சார்பில் மனு தாக்கல் செய்த திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 6 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 6 மாநிலங்களவை எம்பி பதவிக்கு அரசியல் கட்சிகள் சார்பில் 6 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் வருகிற 16ம் தேதி தேர்தல் நடக்காது.

9ம் தேதி மாலை 3 மணிக்கு போட்டியின்றி வெற்றிபெற்றதாக தமிழக தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அதற்கான சான்றிதழையும் அளிப்பார். இந்நிலையில், நேற்று வேட்புமனு தாக்கல் முடிவடைய, ஒரு நிமிடத்திற்கு முன்னதாக அதாவது பிற்பகல் 2.59 மணிக்கு பாமக (ராமதாஸ்) அணி சார்பில் சுவாமிநாதன் வேட்புமனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவர் ராமதாசின் உதவியாளர் ஆவார். இவரும் சுயேட்சையாக மனுதாக்கல் செய்தார்.

Tags : Rajya Sabha Election ,DMK ,AIADMK ,Congress ,Christopher Tilak ,DMDK ,Sudeesh ,PMK ,Anbumani ,Chennai ,Rajya Sabha ,Tamil Nadu ,Trichy Siva ,Constantine Ravindran ,L.K. Sudeesh ,Thambidurai ,
× RELATED திருமண விழாவில் ஒன்றாக கலந்துகொள்ள ஒரே காரில் ஜோடியாக வந்த விஜய் – த்ரிஷா!