மும்பை: உலகக் கோப்பை டி20 2வது அரையிறுதிப் போட்டி மும்பையில் இன்று இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற உள்ளது. உலகக் கோப்பை டி20 இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், 2வது அரையிறுதிப் போட்டி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் குரூப் 2ல் நடந்த 3 போட்டிகளிலும் அட்டகாச வெற்றிகளை பதிவு செய்த இங்கிலாந்து அணியுடன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா மோதவுள்ளது. சூப்பர் 8 சுற்றில் குரூப் 1ல் இடம்பெற்றிருந்த இந்திய அணி, தான் ஆடிய 3 போட்டிகளில் ஒன்றில் தோல்வியை தழுவியது.
இங்கிலாந்து அணியில் அச்சுறுத்தக்கூடிய சுழல் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருவது அந்த அணியின் பலமாக உள்ளது. இருப்பினும் கடைசியாக நடந்த போட்டிகளில் இரு அணிகளும், சேசிங்கில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி ஈட்டி அசத்தின. இந்திய அணியை பொறுத்தவரை வலிமையான அணிகளுடன் மோதும்போது குறிப்பிடத்தக்க பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் திணறி வருகிறது. கடைசியாக நடந்த, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு அதிரடியாக 97 ரன்களை குவித்ததால் இந்தியா அரையிறுதியில் அடியெடுத்து வைத்துள்ளது.
துவக்க வீரராக களமிறங்கி அசத்தலாக ரன் குவிக்க வல்ல அபிஷேக் சர்மா இன்றைய போட்டியில் கைகொடுத்தால் இந்திய அணியின் வெற்றியை யாராலும் தடுக்க இயலாது. நடப்பு தொடரில் அவரால் பெரியளவில் ஸ்கோர் குவிக்க முடியாததால், இந்திய அணியும் தடுமாறி வருவது கண்கூடு. இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி, சஞ்சு சாம்சனை வீழ்த்த முக்கிய அஸ்திரமாக ஜோப்ரா ஆர்ச்சரை நம்பி இருப்பர். அதேபோல் வில் ஜாக்ஸ் பந்துகளை எதிர்கொள்வதில் அபிஷேக் சர்மா திணறி வருவதை இங்கி கேப்டன் சரியாக பயன்படுத்துவார் என எதிர்பார்க்கலாம். இந்திய அணியின் மற்றொரு அதிரடி வீரர் இஷான் கிஷண், துவக்க போட்டிகளில் சரவெடிகளை கொளுத்திப் போட்டபோதும், சமீப போட்டிகளில் அவரிடம் வேகத்தை காண முடியவில்லை.
அதேபோல், கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா போன்றோரும் முழு நம்பிக்கையுடன் ஃபார்முக்கு திரும்பினால் நலம். இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி ஆகியோரின் மந்திர சுழல் முக்கிய பங்கு வகிக்கும். தவிர, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ் சிறப்பான முறையில் பந்துகளை வீசி வருகின்றனர். உலகக் கோப்பை டி20 அரையிறுதிப் போட்டிகளில் தொடர்ச்சியாக 3வது முறையாக இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. 2022ல் நடந்த போட்டியில் இந்தியாவை வென்ற இங்கி. கோப்பையையும் கைப்பற்றியது. அதேபோல், 2024ல் இங்கியை வென்ற இந்தியா கோப்பையை தட்டிச் சென்றது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி, இறுதிப் போட்டியிலும் வெல்ல வாய்ப்பு இருப்பதால் இரு அணிகளும் வெற்றிக்கு தீவிர முனைப்பு காட்டும்.
