மிலன்: இத்தாலி கோப்பை கால்பந்து அரையிறுதியின் முதல் நிலை போட்டியில் பலம் வாய்ந்த இன்டர் மிலன் – கோமோ அணிகள் கோல் போட முடியாமல் டிரா செய்தன. இத்தாலியில் நடந்து வரும் இத்தாலி கோப்பை கால்பந்து போட்டிகளில் முன்னணி அணிகள் மோதி வருகின்றன. போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று நடந்த அரையிறுதியில் முதல் நிலை போட்டி ஒன்றில் பலம் வாய்ந்த இன்டர் மிலன் அணி, கோமோ அணியுடன் மோதியது. துவக்கம் முதல் இரு அணி வீரர்களும் பம்பரமாய் சுழன்றாடி கோல் போடுவதில் தீவிர முனைப்பு காட்டினர்.
இருப்பினும் இரு அணிகளின் கோல் கீப்பர்களும் சிறப்பாக செயல்பட்டு கோல் போட முடியாமல் தடுத்து நின்றனர். இந்த போட்டியில் கோமோ அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி பல முறை கோல் போஸ்ட் அருகே சென்றபோதும் கோல் விழவில்லை. எனவே, இப்போட்டி 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த அணிகள் இடையிலான அரையிறுதியின் 2ம் நிலை போட்டி, இந்திய நேரப்படி வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதியின் முதல் நிலைப் போட்டியில் அட்லாண்டா – லேஸியோ அணிகள் மோதுகின்றன. இவை இடையிலான அரையிறுதியின் 2ம் நிலை போட்டி, ஏப்ரல் 23ல் நடைபெற உள்ளது.
