செஞ்சி: சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று திரும்பியபோது செஞ்சி அருகே கிணற்றில் கார் பாய்ந்து நீரில் மூழ்கி 4 பேர் உயிரிழந்தனர். சென்னை கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் வினோத் (38). உயர்நீதிமன்ற வழக்கறிஞர். இவரும், நண்பர்கள் மவுலிவாக்கத்தை சேர்ந்த குமார் மகன் சேகர் (27), கொளப்பாக்கத்தை சேர்ந்த ஜெயமுருகன் (42) ஆகிய 3 பேரும் காரில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றனர். காரை கிருமாம்பாக்கத்தை சேர்ந்த ராஜா (45) என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.
இவர்கள் கிரிவலம் முடித்துவிட்டு நேற்று காலை செஞ்சி வழியாக சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தனர். இரவு முழுவதும் கண் விழித்து பயணித்ததால் தூக்க கலக்கத்தில் டிரைவர் தாறுமாறாக ஓட்டியதில், சத்தியமங்கலம் அடுத்த ஆலம்பூண்டி அருகே சாலையோர விவசாய பயன்பாட்டுக்கான கிணற்றில் கார் பாய்ந்தது. சுமார் 50 அடி ஆழ கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் கார் மூழ்கியது. தகவலறிந்து சத்தியமங்கலம் போலீசாரும் செஞ்சி தீயணைப்புத்துறையினரும் வந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி காரில் இருந்தவர்களை காப்பாற்ற முயன்றனர். காருக்குள் சிக்கிக் கொண்டதால் அவர்களை மீட்பது மிகவும் சிரமமாக இருந்தது. பிறகு கிரேன் வரவழைக்கப்பட்டு கயிறு கட்டி தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டரை மணி நேரம் போராடி காரை வெளியே எடுத்தனர். காருக்குள் இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 பேரின் சடலங்கள் மட்டுமே இருந்தது. இதனால் மீண்டும் தீயணைப்பு வீரர்கள் இறங்கி கிணற்றிலிருந்து மேலும் ஒருவரது உடலை மீட்டனர்.
வினோத், சேகர், ராஜா மற்றும் ஜெயமுருகன் ஆகிய 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு கூடியதால் திருவண்ணாமலை- செஞ்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இறந்தவர்களில் சேகர் தேசிய கபடி வீரர், காரை ஓட்டி வந்த ராஜா தனியார் கம்பெனி ஆட்டோ டிரைவர், ஜெயமுருகன் ரியல் எஸ்டேட் அதிபர் ஆவார்கள். பலியானவர்களில் சேகரை தவிர மற்றவர்கள் அனைவரும் திருமணமானவர்கள். விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
