×

திமுக கூட்டணியில் அபார வெற்றி: முதல் முறையாக அங்கீகாரத்துடன் ‘பானை’யில் விசிக

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை மையமாக வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை திருமாவளவன் கடந்த 1991ல் துவங்கினார். தற்ேபாது சமுதாயம் மட்டுமின்றி பொதுகட்சியாகவும் மாற்றி வருகிறார். கட்சி தொடங்கியபின் 1999ல் தேர்தல் களத்திற்குள் விசிக காலடி எடுத்து வைத்தது. அப்போது போட்டியிட்ட பெரம்பலூர், சிதம்பரத்தில் வெற்றி பெறாவிட்டாலும் கணிசமான வாக்குகளை பெற்றது. தொடர்ந்து, 2001ல் திமுக கூட்டணியில் சட்டமன்ற தேர்தலை சந்தித்து மங்களூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன் முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்துக்குள் காலடி எடுத்து வைத்தார்.

பின்னர் 2006ல் அதிமுகவுடன் கூட்டணி, பின்னர் 2009ல் திமுகவுடன் கூட்டணி, அதன்பிறகு 2014ல் மக்கள் நலக்கூட்டணி என்று தேர்தலை சந்தித்து வந்தது. ஆனால் கூட்டணிகள் மாறி, மாறி அமைத்து எம்பி, எம்எல்ஏ சீட்டை பிடித்தாலும் விசிகவின் கனவான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உருவெடுக்க முடியாமல் போனது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து 2 இடங்களில் வெற்றி பெற்றாலும் விசிகவிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. காரணம் சிதம்பரம் தொகுதியில் மட்டும் திருமாவளவன் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார். இதனால் விசிக 2 எம்பி தொகுதியில் வெற்றி பெற்றாலும் அங்கீகாரம் கிடைக்காமல் போனது.

தொடர்ந்து, 2021 சட்டமன்ற தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்ட விசிக 4 இடங்களில் வெற்றிபெற்றது. இதனால் விசிகவின் நீண்டநாள் கனவு மீண்டும் நூலிழையில் கைவிட்டுச் சென்றது. இந்நிலையில்தான் நூலிழையில் விட்டதை பிடிக்க கடந்த 2024 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் விழுப்புரம், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விசிக தனிச்சின்னமான பானை சின்னத்தில் போட்டியிட்டு அபார வெற்றிபெற்றது. அத்துடன் தன்னுடைய நீண்டநாள் கனவான மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியதன் மூலம் விசிக தன்னுடைய கனவை நனவாக்கியது. மேலும் விசிகவின் விருப்பப்படி பானை சின்னத்தையும் இந்திய தேர்தல் ஆணையம் அக்கட்சிக்கு வழங்கியது.

அதனடிப்படையில் தற்போது தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விசிக முதல்முறையாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தலை சந்திக்க உள்ளது. தற்போது விசிக அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக உருவெடுத்து பானைச் சின்னமும் வழங்கப்பட்டுவிட்டதால் எந்தவொரு பிரச்னையின்றி தேர்தல் களத்தை சந்திக்கிறது. இதனால் விசிகவில் உள்ள தொண்டர்கள், திமுக கூட்டணி நிர்வாகிகளுடன் இணைந்து உற்சாகத்துடன் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

Tags : Dimuka ,Vizika ,Banai ,Thirumavalavan ,Liberation Leopards Party ,Tamil Nadu ,Threbad ,Visica ,
× RELATED போர் பதற்றம்: தமிழர்களின் பாதுகாப்பை...