×

ஈரான் உச்ச தலைவர் கமேனி கொலை எதிரொலி; அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தம்

சென்னை: ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனி அமெரிக்கா ராணுவம் குண்டு வீசி கொன்றதை தொடர்ந்து சென்னையில் உள்ள அமெரிக்கா துணை தூதரகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தடையை மீறி போராட்டம் நடத்த வந்த விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டது. ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவரான காமேனி மற்றும் அவரது மகள், மருமகன், பேரக்குழந்தைகள் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் உயிரிழந்தனர். இதனால் ஈரானில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும், உச்சபட்ச தலைவரான காமேனி படுகொலையை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதேபோல் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள அமெரிக்கா துணை தூதரகத்தை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்திருந்தனர். இதையடுத்து அமெரிக்கா துணை தூதரகத்திற்கு போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர் மேற்பார்வையில் ஒரு இணை கமிஷனர்கள் மற்றும் 4 துணை கமிஷனர்கள் தலைமையில் தடுப்புகள் அமைத்து துப்பாக்கி ஏந்திய போலீசார் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அண்ணா மேம்பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலை மற்றும் அமெரிக்கா துணை தூதரகம் முன்பு போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் போலீசாரின் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் அமெரிக்கா துணை தூதரகத்தை முற்றுகை விட அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்கள் மற்றும் கருப்பு கோடி, பதாகைகள் ஏந்தியபடி முற்றுகை போராட்டம் நடத்த வந்தனர்.

இந்த போராட்டத்தில் இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிமுன் அன்சாரி, தனியரசு, நடிகர் கருணாஸ், மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானோர், ஈரான் உச்சபட்ச தலைவர் காமேனி மற்றும் ஈரான் நாட்டு பிரதமர் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்து இருந்தனர். அவர்களை போலீசார் கதீட்ரல் சாலையில் தடுப்புகள் அமைத்து தடுத்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும், ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் மாலை விடுவித்தனர்.

Tags : Iran ,Supreme Leader ,Khamenei ,U.S. Embassy ,Vice President ,Mrumalavan ,CHENNAI ,US DEPUTY EMBASSY ,HEAVY ,SUPREME ,KHAMENI ,US MILITARY ,Thirumavalavan ,
× RELATED போர் பதற்றம்: தமிழர்களின் பாதுகாப்பை...