×

கன்னியாகுமரியில் இன்று குவிந்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வார விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்படும். இந்தநிலையில் வார விடுமுறையான இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிய தொடங்கினர். இதற்கிடையே பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காட்டில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலில் இன்று மாசி கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மண்டைக்காடு சென்றனர். முன்னதாக அவர்கள் காலையில் கன்னியாகுமரிக்கு வந்தனர். இதனால் இன்று மண்டைக்காடு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் கன்னியாகுமரியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது.இதையடுத்து திரிவேணி சங்கமத்தில் சுற்றுலா பயணிகள், மண்டைக்காடு பக்தர்கள் திரண்டு கடலில் இருந்து வெளிவரும் கதிரவனை காண ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் மேகமூட்டம் காரணமாக வழக்கமான நேரத்துக்கு சூரியஉதயம் தெரியவில்லை. அதைத்தொடர்ந்து பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கடலில் புனிதநீராடியதுடன், கணபதி மற்றும் பகவதி அம்மன் கோயில்களுக்கு சென்றனர். அங்கு நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் காந்தி, காமராஜர் மண்டபங்கள், காட்சி கோபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்தனர்.

பின்னர் காலை 8 மணி ஆனதும் சுற்றுலா பயணிகளின் கவனம் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் நோக்கி திரும்பியது. கடலில் உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாலத்தை கண்டுகளிக்க படகில் செல்ல டிக்கெட் எடுக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். பின்னர் டிக்கெட் எடுத்து படகில் விவேகானந்தர் மண்டபம், கண்ணாடி பாலம், திருவள்ளுவர் சிலை பகுதிகளுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர்.

Tags : Kanyakumari ,
× RELATED தமிழுக்கும், மணக்கும் மல்லிகைக்கும் பெயர் பெற்றது மதுரை: பிரதமர் மோடி உரை